தமிழகத்திலும் கேரளத்திலும் ஓட்டு திருட்டு நடக்காது: ப.சிதம்பரம் நம்பிக்கை
திருநெல்வேலி: ''தமிழகத்திலும், கேரளாவிலும் ஓட்டு திருட்டு நடக்காது,'' என, திருநெல்வேலியில் நடந்த காங்., மாநில மாநாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார். 'ஓட்டுத் திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம்' என்ற தலைப்பில் தமிழக காங்., கமிட்டி சார்பில் அரசியல் மாநாடு நேற்று திருநெல்வேலியில் நடந்தது.முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: ஓட்டுத் திருட்டு என்பது நமக்கு புதிது. பீகார் மாநிலத்திலும் கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய லோக்சபா தொகுதி மகாதேவபுரா சட்டசபை தொகுதியில் இவ்வாறு ஓட்டுத் திருட்டு நடந்தது. இதைத்தான் காங்., தலைவர் ராகுல் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கினார். பெங்களூரு மத்திய தொகுதியில் 88 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்ற காங்.,வேட்பாளர் மன்சூரை விட பா.ஜ. வேட்பாளர் ஒரே ஒரு சட்டசபை தொகுதியில் மட்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஓட்டுகள் முன்னிலை பெற்றதாக அறிவித்து வெற்றி பெற செய்தனர். இதை விசாரித்த போது பல்வேறு வீடுகளிலும் ஓட்டு திருட்டு நடந்தது தெரியவந்தது. குல்பர்கா தொகுதி ஆலந்த் சட்டசபை தொகுதியிலும் இதே போல ஓட்டு திருட்டு நடந்தது. பீகாரில் ஒரு தொகுதியில் செயின்ட் தெரேசா பூத் பகுதியில் 70 பேர் இறந்து விட்டதாகவும் அதில் 59 பேர் இளைஞர்கள் எனவும் கூறினார்கள். இளைஞர்கள் இறக்க வாய்ப்புண்டு. ஆனால் 61 பேர் இறக்கும் இடத்தில் 48 பேர் இளைஞர்கள் என பொய்யான தகவல்களை கூறுகின்றனர். கோபால்கஞ்ச் தொகுதியிலும் ஒரு பூத்தில் 641 பேரை நீக்கப்பட்டதாக அறிவித்திருந்தார்கள். ஒரு பூத்தில் 800 முதல் இருந்து 1100 பேர் வாக்காளர்களாக இருப்பார்கள். அப்படியானால் 641 பேர் அந்த பூத்தில் இருந்து எவ்வாறு நீக்க முடியும். கர்நாடகம், பீகார், மகாராஷ்டிரா போல தமிழகத்திலோ கேரளாவிலோ ஓட்டு திருட்டு நடக்க வாய்ப்பில்லை. தமிழகத்தில் தி.மு.க., போன்ற வலிமையான கட்சி உள்ளது. கேரளாவிலும் இரண்டு முக்கியமான கட்சிகளின் அணிகள் உள்ளன. அங்கும் ஓட்டு திருட்டு நடக்க வாய்ப்பில்லை. இருப்பினும் தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., இணைந்திருப்பதால் ஓட்டு திருட்டு நடந்து விடுமோ எனத்தோன்றுகிறது என்றார். மாநில தலைவர் செல்வ பெருந்தகை உள்ளிட்டோர் பேசினர்.