உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பாபநாசம் அணை பாசனத்திற்கு திறப்பு தாமிரபரணியில் சிக்கிய 13 பேர் மீட்பு

பாபநாசம் அணை பாசனத்திற்கு திறப்பு தாமிரபரணியில் சிக்கிய 13 பேர் மீட்பு

திருநெல்வேலி:பாபநாசம் அணையில் இருந்து திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களின் நெல் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் அதில் சிக்கிய 9 பெண்கள் உட்பட 13 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.இந்த இரு மாவட்டங்களில் ஜூன் துவங்கி நான்கு மாதங்களுக்கு கார் பருவ நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. விவசாயத்திற்காக பாபநாசம் அணையில் இருந்து நேற்று காலை 800 கன அடி வீதம் தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் சுகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அக். 2 வரை 122 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இரு மாவட்டங்களிலும் சேர்ந்து 46 ஆயிரத்து 786 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.சபாநாயகர் கூறுகையில் '' மாற்றுத்திறனாளிகள் குறித்த தமிழக அரசின் மசோதாவிற்கு கவர்னர் ரவி உடனடியாக அனுமதி அளித்துள்ளார். இதற்காக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு நன்றி தெரிவிக்கிறோம். இனி எதையும் அவர் காலதாமதப்படுத்த முடியாது என்ற நிலை உள்ளது ''என்றார்.

தாமிரபரணியில் 13 பேர் மீட்பு

பாபநாசம் அணையில் இருந்து திறக்கப்பட்ட 800 கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் வந்ததால் நீர் வரத்து அதிகரித்தது.அம்பாசமுத்திரம் அருகே எரிச்சடையார் கோயில் பகுதியில் தாமிரபரணி ஆற்றின் நடுவில் பாறையில் குளித்துக் கொண்டிருந்த 9 பெண்கள் ஒரு சிறுவன் உட்பட 13 பேர் ஆற்றுக்குள் சிக்கிக் கொண்டனர். காலை 11:00 மணிக்கு ஆற்றுக்குள் நடந்து வந்தனர். அப்போது இருந்ததை விட மதியம் 12:30 மணிக்கு நீர்மட்டம் அதிகரித்தது. அம்பாசமுத்திரம் தீயணைப்பு அலுவலர் பலவேசம் தலைமையில் வீரர்கள் கயிறு கட்டி அவர்களை மீட்டனர். 'பாபநாசம் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் அங்கு தண்ணீர் அதிகரிக்கவில்லை . அவர்கள் ஆழமான பகுதியில் குளித்ததால் மீட்கப்பட்டார்கள்' எனவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை