| ADDED : மே 22, 2025 03:13 AM
திருநெல்வேலி:வள்ளியூரில் புது பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை பார்வையிட வந்த சபாநாயகர் அப்பாவு மற்றும் திருநெல்வேலி கலெக்டர் சுகுமாரை, தங்கள் பகுதியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி கோட்டையடி மக்கள் முற்றுகையிட்டனர்.திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமம் கோட்டையடி. இங்கு குடிநீர், சாலை, மயான சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இக்கோரிக்கைகள் குறித்து தெரிவித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. எனவே நேற்று 200க்கும் மேற்பட்டோர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் வந்தனர். அப்போது சபாநாயகர்அப்பாவு, கலெக்டர் சுகுமார் ஆகியோர் வள்ளியூரில் புதுபஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை பார்வையிடுவதாக தகவல்கிடைத்தது. எனவே 200க்கும் மேற்பட்டோர் பஸ் ஸ்டாண்டுக்கு சென்று சபாநாயகரை சூழ்ந்து கொண்டு கெரோ செய்தனர். கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர்.தள்ளுமுள்ளு ஏற்படாமல் போலீசார் தடுத்தனர். கோட்டையடியில் ஆய்வு செய்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அங்கிருந்த அதிகாரிகள் உறுதி அளித்த பின்னரே மக்கள் கலைந்து சென்றனர்.சபாநாயகர் எம்.எல்.ஏ.,வாக இருக்கும் ராதாபுரம் தொகுதியில் பணகுடி, ராதாபுரம் பகுதிகளில் பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதில் பணகுடியிலும் கடந்த வாரம் பொதுமக்கள் போராட்டத்திற்கு தயாராகினர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.