சார் பதிவாளர் தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டம்
திருநெல்வேலி:மேல நீலிதநல்லுார் சார் பதிவாளர் செல்லத்துரை தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு துறை ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேல நீலிதநல்லுார் சார் பதிவாளர் செல்லத்துரையிடம் பத்திரப்பதிவு மேற்கொள்ள வந்த முனீஸ்பாண்டி என்பவர் போதுமான ஆவணங்கள் இல்லாமல் முறைகேடான பதிவுக்கு கட்டாயப்படுத்தினார். சார் பதிவாளர் மறுத்ததால் அவரை தாக்கினார். இதில் காயமுற்ற சார்பதிவாளர், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முனீஸ் பாண்டியை போலீசார் கைது செய்தனர். போராட்டம்
இந்நிலையில் இச்சம்பவத்தை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு துறை ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலியில் ஒருங்கிணைந்த மாவட்ட பதிவாளர் அலுவலகம் முன்பாக நடந்த போராட்டத்தில் சார் பதிவாளர்கள் சங்கத்தினர், பதிவுத்துறை அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் பதிவுத்துறை அடிப்படை பணியாளர்கள், அலுவலக உதவியாளர் சங்கத்தினர் பங்கேற்றனர்.