உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / செஞ்சிலுவை சங்க உறுப்பினர் பட்டியலில் குளறுபடி:நாளை பொதுக்குழு நடக்குமா

செஞ்சிலுவை சங்க உறுப்பினர் பட்டியலில் குளறுபடி:நாளை பொதுக்குழு நடக்குமா

திருநெல்வேலி,:திருநெல்வேலி மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நாளை நடக்க உள்ள நிலையில் உறுப்பினர்கள் பட்டியல் தெளிவின்றி இருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் செஞ்சிலுவை சங்கம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு சமுதாய பணிகளை செய்துவருகின்றனர். 2017 முதல் 2020 வரை செயல்பட்ட மாவட்ட நிர்வாக குழு, கொரோனா காலத்தில் செயல்படவில்லை. மீண்டும் செயல்படுத்துவதற்காக 2024ம் ஆண்டு செப்டம்பரில் பொதுக்குழு கூட்டத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. வண்ணார்பேட்டை தனியார் கல்லுாரி வளாகத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பலருக்கும் அழைப்பிதழ் வராததாலும் போதிய உறுப்பினர்கள் வராததாலும் கோரம் இன்றி ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் மீண்டும் நாளை செஞ்சிலுவை சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்திற்கு திருநெல்வேலி கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா அழைப்பு விடுத்துள்ளார்.ஆனால் இந்த முறையும் கடந்தாண்டு போலவே உறுப்பினர்கள் பட்டியல் முழுமையாக வெளியிடப்படவில்லை. 2015--16க்கு பிறகு உறுப்பினராக சேர்ந்தவர்களின் பட்டியல் சேர்க்கப்படவில்லை. தென்காசி மாவட்டம் பிரிந்த பிறகும் அங்குள்ள உறுப்பினர் பட்டியல் திருநெல்வேலியில் உள்ளது. இறந்தவர்கள் பெயரும் பட்டியலில் இன்னும் உள்ளது. எனவே இவற்றை சரி செய்துவிட்டு பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டும் என செஞ்சிலுவை சங்கத்தின் முன்னாள் சேர்மன் டாக்டர் சார்லஸ் பிரேம்குமார் நேற்று சுட்டிக் காட்டினார். டாக்டர் பிரேம்சந்திரன், ஆனி ரெக்லான்ட், கிலாடிஸ் ஸ்டெல்லா பாய் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.கண்ணா கருப்பையாவிடம் கேட்டபோது '' இதுகுறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசி அறிவிப்பு வெளியிடுகிறேன்'' என்றார்.இன்று ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் நாளை பொதுக்குழு கூட்டம் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி