உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / லஞ்சம் வாங்கிய ஓய்வு வணிகவரி அலுவலருக்கு 4 ஆண்டுகள் சிறை; மனைவிக்கும் 4 ஆண்டுகள் ; 20 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு

லஞ்சம் வாங்கிய ஓய்வு வணிகவரி அலுவலருக்கு 4 ஆண்டுகள் சிறை; மனைவிக்கும் 4 ஆண்டுகள் ; 20 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் 2005ல் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஓய்வு பெற்ற வணிகவரி அதிகாரி ஜெயபாலனுக்கு 74, இருபதாண்டுகளுக்கு பிறகு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சொத்து குவிப்பு வழக்கில் அவரது மனைவி கோமதி ஜெயத்துக்கும் 68, நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் என்.ஜி.ஓ.,காலனி ஜெயபாலன் 74. இவரது மனைவி கோமதி ஜெயம். ஜெயபாலன் 2005ல் திருநெல்வேலி மாவட்டம் நாங்கு நேரி வட்ட துணை வணிகவரி அலுவலராக பணிபுரிந்தார். நாங்குநேரி அருகே தளபதி சமுத்திரத்தில் இயங்கிய சாய் பாட்டில் தனியார் ஆலையில் வருமான வரி மதிப்பை திருத்துவது தொடர்பாக ரூ.25 ஆயிரம் லஞ்சம் தரும்படி ஜெயபாலன் கேட்டார். நிறுவன நிர்வாக இயக்குனர் அசோக்குமாரிடம் லஞ்சம் வாங்கும் போது ஜெயபாலனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சாத்தூரில் உள்ள அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். வருமானத்துக்கும் அதிகமாக சொத்து வாங்கி குவித்திருந்ததால் அவர், அவரது மனைவி கோமதிஜெயம் மீதும் தனியாக ஒருவழக்கு பதிவுசெய்யப்பட்டது.திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளாக நடந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.தற்போது வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பையா, ஜெயபாலன் மற்றும் அவரது மனைவியை குற்றவாளி என தீர்ப்பளித்தார். அதற்கான தண்டனை விவரங்களை அறிவித்தார். லஞ்ச வழக்கில் ஜெயபாலனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறையும், இத்தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும், ரூ 50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுப்பையா தீர்ப்பளித்தார். சொத்து சேர்த்த வழக்கில் கோமதி ஜெயத்துக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் நீதிபதி விதித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராஜகுமாரி ஆஜரானார். இந்த வழக்கிற்கு தேவையான சாட்சியங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை திருநெல்வேலி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் மெக்லரின் எஸ்கால், இன்ஸ்பெக்டர் ராபின் ஞானசிங், போலீசார் பிரகாஷ், மாரியப்பன் ஒப்படைத்தனர். ஜெயபாலன் திருநெல்வேலி சிறை, கோமதிஜெயம் திருநெல்வேலி கொக்கிரகுளம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

காந்தி
ஏப் 30, 2025 19:17

தாமதமான நீதி அநீதிக்கு சமம்.


Yoga Ravi Chennai
ஏப் 30, 2025 11:29

ஏன் சாமி இவ்வளவு சீக்கிரம் தீர்ப்பு எழுதினீர்கள். அவன் செத்த பிறகு கூறியிருக்கலாமே.


VENKATASUBRAMANIAN
ஏப் 30, 2025 08:31

நல்ல காமெடி. இப்படி நீதி இருந்தால் மக்களுக்கு எப்படி பயம் வரும். இப்போது இவர்களுக்கு நல்லதாக போய்விட்டது. வயதானவர்கள் இல்லத்தில் வாழ்வது போல் இருப்பார்கள்.


சமீபத்திய செய்தி