| ADDED : அக் 12, 2025 11:21 PM
திருநெல்வேலி; திருநெல்வேலியில் இருவரை போலீசார் கைது செய்ததால் ஆத்திரத்தில் ரவுடிகள் 5 பேர், பட்டப்பகலில் டூவீலர்களில் சென்று தச்சநல்லுார் போலீஸ் ஸ்டேஷன் உட்பட மூன்று இடங்களில் பெட்ரோல் குண்டு வீசினர். திருநெல்வேலி, தச்சநல்லுார் அருகே ஊருடையான் குடியிருப்பு காட்டு பகுதியில் நேற்று முன்தினம் இரவு சிலர் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அங்கு ரோந்து சென்ற தச்சநல்லுார் எஸ்.ஐ., மகேந்திர குமார் தலைமையிலான போலீசார் சந்தேகத்தின் பேரில் அருண்குமார் மற்றும் ஹரிஹரசுதன் ஆகியோரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் கஞ்சா மற்றும் அரிவாள்கள் இருந்தன. இவர்கள் தேவேந்திர குல வேளாளர் அமைப்பின் தலைவராக செயல்படும் கண்ணபிரான் ஆதரவாளர்கள் ஆவர். அவர்களை போலீசார் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர். பெட்ரோல் குண்டுகள் வீச்சு இதற்கு போலீசை பழிவாங்கும் வகையில் கைதான அருண்குமாரின் தம்பி அஜித்குமார் 30, மற்றும் பெருமாள் 27, கிருஷ்ண பெருமாள் 19, வல்லவன் கோட்டை அருண் 22, சரண் 19, ஆகிய 5 பேர் நேற்று மதியம் இரண்டு டூவீலர்களில் வந்தனர். தச்சநல்லூர் போலீஸ் ஸ்டேஷன் முன்புள்ள ஒரு கோயில் சுவர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றனர். பின்னர் திருநெல்வேலி- - மதுரை சாலையில் கரையிருப்பு பகுதியில் சோதனை சாவடி அருகே இருந்த தடுப்பு இரும்பு பலகைகள் மீதும் பெட்ரோல் குண்டுகளை வீசினர். அதனையடுத்து தாழையூத்து ---- மானுார் சாலையில் தென்கலம் கிராமத்திலும் வெடிகுண்டுகளை வீசிச் சென்றனர். தச்சநல்லுார் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் உள்ள கோயிலில் குண்டு வீசிய பகுதியில் தடய அறிவியல் துணை இயக்குனர் ஆனந்தி தலைமையில் அதிகாரிகள் தடயங்களை சேகரித்தனர். ஐந்து பேர் பெட்ரோல் குண்டுகளை வீசுவது, பின்னர் அவர்கள் டூவீலர்களில் தப்பி சென்ற சிசிடிவி காட்சிகளும் வெளியானது. ஜாதி கும்பல் இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில்' திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய சில ஜாதி அமைப்புகள் தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காகவும் கட்டப்பஞ்சாயத்து, கஞ்சா விற்பனை போன்றவற்றில் ஈடுபடுவதற்காகவும் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களை இதில் பயன்படுத்துகின்றனர். நேற்று முன்தினம் கஞ்சா வழக்கில் இருவரை கைது செய்ததால் அதில் ஒருவரின் தம்பி உட்பட 5 பேர் குண்டு வீசி உள்ளனர். இவர்கள் கண்ணபிரானின் ஆதரவாளர்கள் ஆவர். இவர்களில் அஜித்குமார் உள்ளிட்டவர் மீது போலீஸ் ஸ்டேஷன்களில் முந்தைய வழக்குகள் உள்ளன என்றனர். இதையடுத்து மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என துணை கமிஷனர் பிரசன்ன குமார் தெரிவித்தார். இதனிடையே சரண் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.