மருத்துவக் கழிவு விவகாரம் சேலம் லாரி பறிமுதல்
திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே திருவனந்தபுரம் புற்றுநோய் மருத்துவமனை கழிவுகளை ஏற்றி வந்து கொட்டிய சேலத்தை சேர்ந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் விசாரணைக்கு கொண்டு வந்தனர்.திருநெல்வேலியை அடுத்துள்ள நடுக்கல்லுார், கொண்டாநகரம், கோடகநல்லுார் பகுதிகளில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டல புற்று நோய் சிகிச்சை மையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.தானாக முன்வந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.நேற்று முன்தினம் கேரள மாநில சுகாதாரத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அதன் அறிக்கையை கேரள அரசிடம் தர உள்ளதாக தெரிவித்தனர். இதனிடையே கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை திருநெல்வேலியில் கொண்டு வந்து கொட்டிய லாரிகளின் விபரங்கள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சேகரிக்கப்பட்டன. லாரி பறிமுதல்
இதில் சேலத்தை சேர்ந்த ஒரு லாரியை பறிமுதல் செய்து அதன் டிரைவர் செல்லத்துரையை 30, கைது செய்தனர்.கேரளத்தில் இருந்து கழிவை அகற்றும் கான்ட்ராக்ட் எடுத்துள்ள தனியார் நிறுவனம் தமிழகத்தில் கொட்டப்பட்ட இந்த கழிவுகளை மீண்டும் எடுத்துச்செல்ல உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.