உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / அணுமின் நிலையம் குறித்து மக்களுக்கு விளக்க விஞ்ஞானிகள் அடங்கிய குழுவை அனுப்ப வலியுறுத்தல்

அணுமின் நிலையம் குறித்து மக்களுக்கு விளக்க விஞ்ஞானிகள் அடங்கிய குழுவை அனுப்ப வலியுறுத்தல்

திருநெல்வேலி : கூடன்குளம் அணுமின் நிலைய விவகாரம் குறித்து பிரதமரிடம் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேசவுள்ளார் என நெல்லை எம்.பி., ராமசுப்பு தெரிவித்தார். நெல்லை எம்.பி., ராமசுப்பு கூறியதாவது: மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங், சோனியா தலைமையிலான மத்திய அரசு கண்டிப்பாக நிறைவேற்றாது. மக்கள் நலன் கருதி நாட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.கடந்த 15 ஆண்டுகளாக நடக்கும் கூடன்குளம் அணு மின்நிலைய கட்டுமானப்பணிகள் நிறைவு பெறும் சூழ்நிலையில் தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கூடன்குளம் சூழ்நிலையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. கூடன்குளம் அணு மின்நிலையம் அதிநவீன சர்வதேச பாதுகாப்பு தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் சுனாமி ஏற்பட்டு அணு மின்நிலையம் பாதிக்கப்பட்ட போது பிரதமர் மன்மோகன் சிங்கை நான் சந்தித்து கூடன்குளம் அணு மின்நிலைய பாதுகாப்பு குறித்து கேட்டேன். கூடன்குளம் அணு மின்நிலையத்தில் உயர்தர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் உறுதியளித்தார்.

கூடன்குளம் அணு மின்நிலையம் குறித்து அப்பகுதி மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையில் உள்ளாட்சித்தேர்தலை நோக்கமாக கொண்டு சில கட்சிகள் செயல்படுகின்றன. மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூடன்குளம் பிரச்னை தொடர்பாக என்னிடம் விசாரித்தார். கூடன்குளம் அணு மின்நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஏழு நாட்களாக மக்கள் நடத்தி வரும் போராட்டம், மீனவர்கள், விவசாயிகளுக்கு ஏற்பட்ட அச்சம் குறித்து அவரிடம் கூறினேன். இதுதொடர்பாக இன்று (நேற்று) பிரதமரிடம் பேசுவதாக அமைச்சர் தெரிவித்தார். கூடன்குளம் அணு மின்நிலைய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மக்களுக்கு விளக்கவும், போராட்டக்குழுவுடன் பேசவும் விஞ்ஞானிகள் அடங்கிய உயர்மட்டக்குழுவை அனுப்ப வலியுறுத்தியுள்ளேன்.

ரூ. 43 கோடியில் தூண்டில் வளைவு : தமிழகத்தில் கடல்அரிப்பு, இயற்கைச்சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க 9 கடலோர மாவட்டங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்க கடந்த 2008ம்ஆண்டு 1,012 கோடி ரூபாய்க்கு மத்திய அரசு மதிப்பீடு தயாரித்தது. 13வது நிதிக்குழுவில் 200 கோடி ரூபாய் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் உவரி, கூட்டப்புளி, பெருமணல், பஞ்சல், தொம்மையாபுரம், இடிந்தகரை, கூத்தங்குழி, கூட்டப்பனை, கூடுதாழை, பெரியதாழையில் 43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில்வளைவு அமைக்கப்படவுள்ளது. இப்பணிகளை துவக்க முதல்வருக்கு கடிதம் அனுப்பினேன். மத்திய கப்பல் துறை சார்பில் கூத்தங்குழியில் 1.75 கோடி ரூபாய் செலவில் கலங்கரைவிளக்கம் அமைக்கப்படவுள்ளது.இவ்வாறு எம்.பி., ராமசுப்பு தெரிவித்தார். கிழக்கு மாவட்ட காங்., தலைவர் மோகன் குமாரராஜா, மாவட்ட பொதுச்செயலாளர் சுத்தமல்லி முருகேசன் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை