மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
குற்றாலம்:குற்றாலத்தில் உள்ள அருவிகளில் சுற்றுலா பயணிகள் தள்ளு முள்ளு இன்றி பாதுகாப்பாக குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என குற்றாலத்தில் நடந்த சாரல் திருவிழாவில் எஸ்.பி., விஜயேந்திர பிதரி பேசினார்.குற்றாலம் சாரல் திருவிழாவின் ஆறாம் நாள் நிகழ்ச்சிகள் கலைவாணர் கலைரயங்கில் நடந்தது. எஸ்.பி.,விஜயேந்திர பிதரி தலைமை வகித்து நாய் கண்காட்சியில் வெற்றி பெற்ற நாய் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசும் போது, ''குற்றாலம் கடல் மட்டத்திலிருந்து 167 மீட்டர் உயரத்தில் உள்ளது. தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலமாக திகழ்கிறது. குற்றாலத்தில் பல அருவிகள் உள்ளன. மூலிகை கலந்த தண்ணீர் அருவிகளில் கொட்டுகிறது. அருவியில் குளித்தால் நோய்கள் பறந்து போகும்.ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை சீசன் உள்ளது. இக்கால கட்டத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து செல்கின்றனர். இவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசலை தவிர்த்து, வாகன விபத்துகளை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சீசன் காலத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு புணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் 24 மணி நேரமும் பணியாற்றுகின்றனர். அருவிகளில் சுற்றுலா பயணிகள் தள்ளு முள்ளு இன்றி பாதுகாப்பாக குளிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்'' என்றார்.நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குநர் மோகன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் மாதவன் முன்னிலை வகித்தனர். நேரு யுவ கேந்திரா ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் வரவேற்றார். தொழிலாளர் துணை கமிஷனர் சுந்தரராஜன், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் சங்கரசுப்பிரமணியன் வாழ்த்தி பேசினர்.குற்றாலம் மெயின் அருவியில் தஞ்சாவூரை சேர்ந்த பெண் குளித்த போது அவரது 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர கம்மல் தவறி அருவி தடாகத்தில் விழுந்து விட்டது. இதனை தென்காசியை சேர்ந்த காஜா மைதீன், பக்கீர் மைதீன், ஹக்கீம் மீட்டு கொடுத்தனர். இம்மூவருக்கும் எஸ்.பி., பரிசு வழங்கி பாராட்டினார்.முக்கூடல் ஆதித்யா குழுவினரின் பரதநாட்டியம், குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி பேராசிரியை வேலம்மாள் முத்தையா, குமரி கண்ணன் குழுவினரின் இசையுடன் கூடிய வழக்காடு மன்றம், நடிகர் போண்டா மணி, கிங்காங், மகாதேவன், ரம்யா, பிரபு குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது.நிகழ்ச்சிகளை ஏ.பி.ஆர்.ஓ.நவாஸ்கான் தொகுத்து வழங்கினார். குற்றாலம் டவுன் பஞ்.,நிர்வாக அதிகாரி ராசையா, கோபி, தலைமையாசிரியர் முத்தையா, இன்ஸ்பெக்டர் குமாரவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் (பொறுப்பு) ஜோதி முருகன் நன்றி கூறினார்.
29-Sep-2025
25-Sep-2025