ஆட்டோ விபத்து எதிரொலி 18 ஆட்டோக்களுக்கு அபராதம்
திருத்தணி:திருத்தணி நகராட்சி கலைஞர் நகரை சேர்ந்தவர் பாலாஜி 29. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சந்தியா, 26 என்பவருக்கும் நேற்று முன்தினம் காலை திருத்தணி முருகன் மலைக்கோவிலில் திருமணம் நடந்தது.அதன்பின், மூலவரை தரிசித்த புதுமண தம்பதி மற்றும் உறவினர் சசிகலா, 45, ஆகியோர், மலைக்கோவிலில் இருந்து ஆட்டோவில் வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஆட்டோ ஓட்டுனர் முத்து அதிவேகமாக வந்ததில், மலைப்பாதையில் ஆட்டோ கவிழ்ந்து, ஓட்டுனர் உட்பட நால்வரும் படுகாயமடைந்தனர்.இதன் எதிரொலியாக, நேற்று மாலை திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகர், திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் திடீர் சோதனை நடத்தினார்.அப்போது, மலைக்கோவிலுக்கு சென்ற ஆட்டோ ஓட்டுனர்களிடம் விசாரணை நடத்தியதில், ஓட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ், பேட்ஜ் மற்றும் ஆர்.சி., புத்தகம் இல்லாமல் ஆட்டோக்கள் ஓட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.நேற்று ஒரே நாளில் மட்டும், 18 ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்களிடம் இருந்து, 37,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.