| ADDED : ஜூலை 15, 2024 11:04 PM
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஸ்ரீகாளிகாபுரத்தில், 15 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு போதுமான பேருந்து வசதி இல்லை. திருத்தணியில் இருந்து ஆர்.கே.பேட்டை வழியாக அரசு பேருந்து தடம் எண்: டி 65 மட்டுமே, 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இடையில் சில பேருந்து தடம் அறிமுகப்படுத்தப்பட்டாலும், சீராக இயக்கப்படவில்லை என பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை வந்து செல்லும் அரசு பேருந்து 'டி65'க்காக, ஸ்ரீகாளிகாபுரம் பகுதிவாசிகள் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து பயணிக்கின்றனர். ஸ்ரீகாளிகாபுரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்த நிழற்குடை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இடித்து அகற்றப்பட்டது. 1அதன் பின், புதிய நிழற்குடை கட்டப்படவில்லை. இதனால், பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்தும் பேருந்துக்காக காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. ஸ்ரீகாளிகாபுரத்தில், அடிப்படை வசதிகளுடன் கூடிய நிழற்குடை அமைக்க வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.