| ADDED : ஜூலை 29, 2024 02:19 AM
பூந்தமல்லி:பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு, நேற்று முன்தினம் இரவு, ஒரு கன்டெய்னர் லாரியில்,'தின்னர்' ரசாயனம் வந்தது. தொழிற்சாலைக்கு சற்று துாரத்திலுள்ள ஒரு இடத்தில் நிறுத்தி, மற்றொரு லாரியில் ரசாயன கேன்களை ஏற்றும் பணியில், ஊழியர்கள் ஈடுபட்டனர்.அப்போது, எதிர்பாராத விதமாக ரசாயன கேன் உடைந்து தீப்பற்றியது. இதில், இரு லாரிகளுக்கும் தீ பரவியது. உடனே ஊழியர்கள், தீயணைப்பான் கருவிகளை பயன்படுத்தி, ஒரு லாரியில் பற்றிய தீயை அணைத்தனர்.மற்றொரு லாரியின் பின்னால் தீ வேகமாக பரவியது. இதுகுறித்த தகவலின்படி பூந்தமல்லி, இருங்காட்டுக்கோட்டை, மதுரவாயல், அம்பத்துார், ஆவடி, ஜெ.ஜெ.நகர்., கோயம்பேடு ஆகிய நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள், இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள், இரு லாரிகளும் எரிந்து நாசமாகின. நசரத்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.