பசுந்தாள் உர பயிர் சாகுபடி வேளாண் துறை ஆலோசனை
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட விதை பரிசோதனை நிலைய, மூத்த வேளாண் அலுவலர் சுகுணா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:ரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்தி வருவதால், மண்ணின் வளம் குறைந்து வருகிறது. தொழு உரம், மண்புழு உரம் இடுதல், ஆட்டுக்கிடை வைத்தல் மற்றும் பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்து, மடக்கி உழுதல் போன்ற பாரம்பரிய முறைகள் மூலம் மண்ணின் வளத்தை மேம்படுத்தலாம்.சணப்பை, தக்கை பூண்டு, சித்தகத்தி, கொளிஞ்சி, மணிலா, அகத்தி மற்றும் நரிப்பயறு ஆகியவை பசுந்தாள் உரமாக பயிர் செய்வதற்கு ஏற்றவையாக உள்ளன.இப்பயிர்களை பயிர் செய்து பூப்பதற்கு முன், நிலத்தில் அப்படியே உழுதுவிட வேண்டும். இதனால், யூரியாவின் பயன்பாடு குறைக்கப்பட்டு, மண்வளம் மேம்படுத்தப்படுகிறது. மேலும், மண்ணிற்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கிறது. விவசாயிகளுக்கு உரச்செலவு குறைவதோடு, பயிரின் உற்பத்தி திறன் 25- - 35 சதவீதம் வரை அதிகரிக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.