உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஈக்காடு ஊராட்சி நுழைவு வாயிலில் தேங்கிய குப்பையால் துர்நாற்றம்

ஈக்காடு ஊராட்சி நுழைவு வாயிலில் தேங்கிய குப்பையால் துர்நாற்றம்

திருவள்ளூர்:ஈக்காடு ஊராட்சி நுழைவு வாயிலில், சாலையோரம் குவிந்துள்ள குப்பையால் துர்நாற்றம் வீசுகிறது.திருவள்ளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஈக்காடு ஊராட்சி திருவள்ளூர்-செங்குன்றம் சாலையில் உள்ளது. செங்குன்றத்தில் இருந்து திருவள்ளூர் வரும் வழியில், அமைந்துள்ள இந்த ஊராட்சியில் தான், திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.திருவள்ளூர் நகரின் நுழைவு வாயிலாக திகழும் ஈக்காட்டில், முறையாக குப்பை அகற்றப்படுவதில்லை என, கிராமவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். உதாரணமாக, சாலையோரம் குவிந்துள்ள குப்பையே சாட்சி என்கின்றனர்.அப்பகுதிவாசிகள். இவ்வளவிற்கும், திருவள்ளூர் ஒன்றியம் அமைத்துள்ள வரவேற்பு பலகை அருகிலேயே, குப்பை கழிவு குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே நிலை தான், ஊராட்சி முழுதும் உள்ளது. இதன் காரணமாக, அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.எனவே, ஈக்காடு ஊராட்சி நிர்வாகம், முறையாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி, சேகராமாகும் குப்பையினை அகற்ற வேண்டும் என, கிராமவாசிகள் கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குப்பை சூழ்ந்த சுடுகாடு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையோரம், ரெட்டம்பேடு சாலை சந்திப்பில், ஒன்றரை ஏக்கர் பரப்பு இடத்தில், பாப்பான்குளம் சுடுகாடு அமைந்துள்ளது. கும்மிடிப்பூண்டி பஜார் மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்களுக்கான பொது சுடுகாடு ஆகும்.கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாக துாய்மை பணியாளர்கள் தினசரி சேகரிக்கும் குப்பைகளை சுடுகாட்டில் குவித்து வருகின்றனர். குப்பை குவியல்கள் அதிகமானதும், அதனை எரித்து வருவதாக பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் சுற்றியுள்ள பகுதிவாசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.சுடுகாடு முழுதும் புதர்கள் மண்டி இருக்கின்றன. சுடுகாட்டின் நுழைவாயிலில் இரும்பு கிரில் கேட் இல்லாததால், மலம், சிறுநீர் கழிக்கும் இடமாக சுடுகாடு மாறி வருகிறது. இதனால் சுடுகாடு முழுதும் மக்கள் வந்து செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம், குப்பைகள் குவிப்பதை நிறுத்த வேண்டும். நுழை வாயலில் கிரில் கேட் அமைக்க வேண்டும். சுடுகாட்டில் உள்ள புதர்கள், குப்பைகளை அகற்றி, மரகன்றுகள் வைத்து முறையாகவும் துாய்மையாகவும் சுடுகாட்டை பராமரிக்க வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ