சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை கட்டுப்படுத்த கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், தலைவர் சகிலா தலைமையில் நடந்தது. வரவு, செலவு, திட்ட பணிகள் மீது ஒப்புதல் என, 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசினர்.காளிதாஸ், தி.மு.க.,: முதல் வார்டில் பழுதாகியுள்ள மழைநீர் கால்வாய்களை சீரமைத்து மூட வேண்டும் என பல முறை கவுன்சிலர் கூட்டத்தில் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.நசரத், தி.மு.க.,: மா.பொ.சி., நகர் தாழ்வான பகுதி என்பதால் மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி தெருக்களில் தேங்கி சுகாதாரம் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. தொடர்மழைக்கு முன் மழைநீர் வடிந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும்.ரவி, அ.தி.மு.க.,: கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால், போக்குவரத்து ஸ்தம்பித்து பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.ஜி.என்.டி., சாலையை தொடர்ந்து ரெட்டம்பேடு சாலையில் தற்போது சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வருகிறது. உடனடியாக சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதே கோரிக்கையை வலியுறுத்தி மற்ற கவுன்சிலர்களும் பேசினர்.கவுன்சிலர்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி தலைவர் சகிலா தெரிவித்தார்.