மண் வளம் பாதுகாக்க தக்கைப்பூண்டு வளர்ப்பு
பொன்னேரி:மீஞ்சூர் வட்டாரத்தில் விவசாயிகள் சம்பா பருவத்திற்கு விளைநிலங்களை உழுது தயார்படுத்தி வருகின்றனர். இதற்காக, பசுந்தாள் உரமாக பயன்படும் தக்கைப்பூண்டு செடிகளை வளர்த்து வருகின்றனர்.நடவு பணிகளை துவங்கும் முன், அவற்றை மண்ணுடன் சேர்த்து உழுவர். இது விளைநிலத்திற்கு நல்ல பசுந்தாள் உரமாகவும், உவர் நிலங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருப்பதால், இவற்றை வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:தக்கைப்பூண்டு விதைக்கப்பட்ட, 45 நாட்களில் செடிகளாக வளர்ந்து, அவற்றை மண்ணுடன் சேர்த்து உழும்போது, விளைநிலத்திற்கு தேவையான தழைச்சத்து கிடைக்கிறது. 1 ஏக்கருக்கு, 20 கிலோ தக்கைப்பூண்டு விதைகள் விதைத்தால், 10,000 கிலோ பசுந்தாள் உரம் கிடைக்கும்.இதில், தழை, மணி, சாம்பல் சத்துக்கள் உள்ளன. தக்கைப்பூண்டு செடிகளில், கார்பன், நைட்ரஜன் ஆகியவை இருப்பதால், மண்வளம் பாதுகாக்கப்படும். ரசாயன உரங்களால் மண் வளம் பாழாவதை தவிர்க்க, தக்கைப்பூண்டு செடிகளை வளர்த்து வருகிறோம்.வேளாண்மை துறையினர் ஒவ்வொரு விவசாயிடமும் இதை வளர்ப்பதால் ஏற்படும் நன்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதனால், ரசாயன உரத்தின் பயன்பாடு வெகுவாக குறையும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.