தரமற்ற விதை விற்றால் நடவடிக்கை துணை இயக்குனர் எச்சரிக்கை
திருவள்ளூர்:தரமற்ற விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விதை விற்பனை கடைகளில், விதை ஆய்வு துணை இயக்குநர் ரவி, ஆய்வாளர் உமாமகேஸ்வரி ஆகியோர், நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.சோழவரம் ஒன்றிய பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.பின் துணை இயக்குநர் ரவி கூறியதாவது:விதை விற்பனை குறித்து முறையான ஆவணங்களை பராமரிக்க வேண்டும். விதை சேமிப்பு களத்தினை சுகாதாரமான முறையில் வைத்திருக்காவிட்டால், உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும். சான்று பற்ற, அனுமதி பெற்ற நல்ல முளைப்புத்திறன் கொண்ட விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். விதை உரிமம் மற்றும் விற்பனை பட்டியல், விவசாயிகள் பார்வையில் தெரியும் வகையில் எழுதி வைக்க வேண்டும்.மேலும், விவசாயிகள் உரிமம் பெறாதவர்களிடம் இருந்து விதைகள் வாங்க வேண்டாம். அரசால் அறிவிக்கப்பட்ட தரமான சான்று பெற்ற நெல் விதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.