திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள்
திருத்தணி, திருத்தணி முருகன் கோவிலில் மாசி மாத பிரம்மோத்சவம் ஒட்டி, நேற்று அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து மஹா தீபாராதனை நடந்தது.நேற்று வார விடுமுறை நாள் மற்றும் திருமண முகூர்த்த நாள் என்பதால், வழக்கத்திற்கு மாறாக காலை முதலே மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.கொளுத்தும் வெயிலில் பக்தர்கள் மற்றும் புதுமண தம்பதியர், பொதுவழியில் மூலவரை தரிசிக்க நீண்டவரிசையில் காத்திருந்து, இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். அதேபோல், 100 ரூபாய் கட்டண தரிசனத்திலும், ஒரு மணி நேரம் காத்திருந்து வழிபட்டனர்.பக்தர்கள் இரு சக்கர வாகனம், கார், வேன் மற்றும் பேருந்துகள் மூலம் மலைக்கோவிலுக்கு சென்றதால், மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில் நீர்மோர், குடிநீர் வழங்கப்பட்டது.சிறுவாபுரி முருகனுக்கு காவடி எடுத்த பக்தர்கள்ஆரணி, அறுபடை வீடு முருக பக்தர்கள் பேரவை சார்பில், 33ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 7ம் தேதி துவங்கிய திருவிழா, 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று சிறுவாபுரி முருகனுக்கு பால் காவடி, வேல் காவடி, மயில் காவடி, புஷ்ப காவடி, கூண்டு காவடி, தேர் காவடி எடுக்கப்பட்டது. நேற்று காலை, ஆரணியில் இருந்து பாதயாத்திரையாக சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு, 150 பக்தர்கள் காவடி எடுத்து சென்றனர். தொடர்ந்து, சிறுவாபுரி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.