உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் அபிஷேக நேரத்திலும் இனி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி

திருத்தணியில் அபிஷேக நேரத்திலும் இனி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசிக்கின்றனர். காலை, 6:00 மணி முதல், இரவு, 8:45 மணி வரை தொடர்ந்து கோவில் நடை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.காலை, 8:00 மணி, மதியம், 12:00 மணி மற்றும் மாலை, 5:00 மணி என மூன்று வேளைகளில் மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை தினமும் நடைபெறும். இதில் பங்கேற்க பக்தர்கள் அபிஷேக டிக்கெட் பணம் கொடுத்து முன்பதிவு செய்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 35 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும். டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே மூலவருக்கு நடக்கும் அபிஷேகத்தை அமர்ந்து பார்க்க முடியும்.இந்த அபிஷேகம் முடிந்து, அந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் முடிந்தவுடன், ஒன்றரை மணி நேரத்திற்கு பின் தான் பொதுவழி மற்றும் 100 ரூபாய் சிறப்பு தரிசன பக்தர்கள் மூலவரை தரிசிக்க அனுமதிக்கப் படுவர். இப்படி மூன்று கால அபிஷேகத்தில் 4 மணி நேரம் பொதுவழி, சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.தற்போது கோவில் நிர்வாகம் பக்தர்கள் நலன்கருதி புதிய முயற்சி எடுத்துள்ளது. முதற்கட்டமாக, கோவில் முக்கிய விழாக்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில், அபிஷேகத்திற்கு, 15 டிக்கெட்டுகள் மட்டும் முன்பதிவு செய்து, 30 பேரை மட்டும் உட்கார வைக்க முடிவு செய்துள்ளது. மீதமுள்ள பக்தர்கள் பொது வழியிலும், 100 ரூபாய் டிக்கெட் பெற்ற பக்தர்களும் தடையின்றி மூலவரை தரிசித்து செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இது குறித்து திருத்தணி கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:முருகன் கோவிலுக்கு அதிகளவில் கூட்டம் வருவதால், அபிஷேக டிக்கெட்டுகள் எண்ணிக்கை குறைத்து பக்தர்கள் தடையின்றி தரிசனம் செய்ய புதிய திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை