உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பள்ளி அருகே பழுதடைந்த கட்டடம்

அரசு பள்ளி அருகே பழுதடைந்த கட்டடம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, வேளகாபுரம் ஊராட்சியில், அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 23 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், கடந்தாண்டு இந்த பள்ளி கட்டடம், 2.82 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி நடந்தது. இதன் காரணமாக தற்போது பள்ளி கட்டடம் புதிது போல் காட்சியளிக்கிறது.இப்பள்ளி கட்டடத்தின் அருகில் அங்கன்வாடி மைய கட்டடம் உள்ளது. பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த கட்டடத்திற்கு பதில் அருகில் உள்ள ஒரு இடத்தில், 15 லட்சம் ரூபாயில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. ஆனால் பழுதடைந்த நிலையில் அரசு பள்ளி அருகே உள்ள பழைய கட்டடத்தை அகற்ற மனு கொடுத்தும் இதுவரை பூண்டி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டடத்தில் தற்போது செடிகள் புதர்போல் வளர்ந்துள்ளன. இதில் இருந்து பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அருகில் உள்ள பள்ளி கட்டத்திற்கு செல்கின்றன. இதனால் மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் பழுதடைந்த கட்டடங்களை அகற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியும், பூண்டி ஒன்றியத்தில் பள்ளி மாணவர்கள் பயிலும் கட்டடத்தின் அருகே உள்ள பழுதடைந்த கட்டடத்தை அகற்றவில்லை. கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை