உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அதிகாரிகள் மேஜையில் துாங்கும் கோப்புகள் நேர விரயத்தை குறைக்க இ - ஆபீஸ் திட்டம்

அதிகாரிகள் மேஜையில் துாங்கும் கோப்புகள் நேர விரயத்தை குறைக்க இ - ஆபீஸ் திட்டம்

சென்னை மாநகராட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவும், கடிதம் மற்றும் காகித பயன்பாட்டைக் குறைத்து, விரைந்து திட்டங்களை செயல்படுத்தவும், 'இ - ஆபீஸ்' என்ற மின்னணு அலுவலகம் திட்டம் துவக்கப்பட உள்ளது.சென்னை மாநகராட்சி, 174 சதுர கி.மீ., பரப்பில், 155 வார்டுகளைக் கொண்ட, 10 மண்டலங்களாக செயல்பட்டது. பின், புறநகரில் உள்ள, 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் மற்றும் 25 ஊராட்சிகளை ஒருங்கிணைத்து, 424 சதுர கி.மீ., பரப்பில், கடந்த 2011ல் மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டது.

நிதி அதிகாரம்

இதன்படி, 200 வார்டுகள், 15 மண்டலங்கள் கொண்ட மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது.சாலை, வடிகால், பூங்கா, கழிப்பறை சீரமைப்பு போன்ற பணிகள் செய்ய, 10 லட்சம் ரூபாய்க்கு குறைவான தொகைக்கு, மண்டல கூட்டத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும்.அதற்கு மண்டல அதிகாரி ஒப்புதல் அளித்ததும், பணிகளை துவங்கலாம். அதே போல், 10 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு தீர்மானம் நிறைவேற்றி, வட்டார துணை கமிஷனரின் ஒப்புதல் பெற வேண்டும்.

காகித கோப்புகள்

அதற்கும் மேலான தொகைக்கு, மாநகராட்சி துணை கமிஷனர்கள், கமிஷனர், மேயரின் ஒப்புதல் தேவை. அதேபோல், நிலைக்குழு தீர்மானம் நிறைவேற்றிய திட்டங்களுக்கும், அந்தந்த துறை வாயிலாக ஒப்புதல் பெற வேண்டும். ஒவ்வொரு திட்டங்களும் அதன் தன்மை, மதிப்பீட்டை பொறுத்து, வார்டு இளநிலை பொறியாளர், உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர், மண்டல அதிகாரி, மாநகராட்சி மேற்பார்வை பொறியாளர், தலைமை பொறியாளர் மற்றும் கல்வி, சுகாதாரம், எம்.பி., - எம்.எல்.ஏ., நிதி ஒதுக்கீடு சார்ந்த துறை அதிகாரிகள் பார்வைக்குச் செல்லும். இவர்களின் ஒப்புதல் பெற்று, ஒப்பந்தம் விடப்படும். அதன் பின், பணிக்கு காலக்கெடு விதித்து, குறிப்பிட்ட நாட்களில் பணி முடிந்த விபரம், தரம் குறித்து, அந்தந்த துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.இந்த கோப்புகள் அனைத்தும் கடிதம் வாயிலாக இளநிலை பொறியாளர் முதல் கமிஷனர், மேயர் வரை செல்கின்றன. இவை, காகிதத்தில் 'பிரின்ட்' செய்யப்பட்டு, ஒரு கோப்பாக கட்டப்பட்டு, அந்தந்த துறைகளுக்கு அனுப்பப்படும்.இதில், 10 லட்சம் ரூபாய் ஒதுக்கும் திட்டத்திற்கு அறிக்கை, கடிதம் தயாரித்தல், முதல் நிலை ஒப்புதல், அடுத்தடுத்த உயரதிகாரிகள் ஒப்புதல் பெற, 3 முதல் 7 நாட்கள் வரை ஆகும். இதுவே, 50 லட்சம் ரூபாய் ஒதுக்க, வட்டார துணை கமிஷனர் வரை கோப்பு செல்லும் போது, பணியின் அவசரத்தைப் பொறுத்து, 3 முதல் 10 நாட்கள் வரை ஆகும்.

பணிச்சுமை குறையும்

தலைமை பொறியாளர், கமிஷனர், மேயர் வரை கோப்புகளை கொண்டு சென்று, அதை அவர்களுக்கு புரிய வைத்து, அவர்கள் திட்டத்தை புரிந்து ஒப்புதல் அளிக்க, 15 நாட்களாகும். சில கோப்புகள், மாதக்கணக்கில் உயரதிகாரிகள் மேஜையில் துாங்கும்.இதனால் நேரம், நிதி விரயம், திட்டங்கள் மக்களிடம் சேர்வதில் காலதாமதம் போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. கீழ்நிலை அதிகாரிகள், கவுன்சிலர்கள் தாங்கள் விரும்பாத திட்டங்களை கமிஷனர், மேயர் பார்வைக்கு கொண்டு செல்லாமல் கிடப்பில் போடவும் முடியும்.இதுபோன்ற தவறுகள் நடைபெறாத வகையில், காகித பயன்பாட்டை குறைத்து, விரைந்து சேவை வழங்க, மாநகராட்சி நிர்வாகத்தை, 'இ - ஆபீஸ்' என்ற மின்னணு அலுவலகமாக மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 'அக்., மாதம், இந்த இ - ஆபீஸ் முழு பயன்பாட்டிற்கு வரும்' என, அதிகாரிகள் கூறினர்.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:கட்டட அனுமதி, வரி விதிப்பு, பொதுமக்கள் புகார் போன்ற சேவைகள், 'ஆன்லைன்' வழியாக நடக்கின்றன. இனிமேல், அலுவல் பணிகளும் ஆன்லைன் வழியாக நடைபெற உள்ளன.வார்டில் இருந்து கமிஷனர், மேயர் வரை செல்லும் அனைத்து கோப்புகளும், இனிமேல் இ - ஆபீஸ் வழியாக நடைபெறும். இதனால், கோப்புகளை அந்த துறை அலுவலகத்திற்கு நேரடியாக கொண்டு செல்வது, ஒப்புதலுக்காக காத்திருப்பது, கோப்பு தேங்குவது போன்ற பிரச்னை தவிர்க்கப்படும்.தற்போது, 15 நாட்கள் வரை ஆகும் கோப்புகளுக்கு, ஒரே நாளில் ஒப்புதல் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் நேர விரயம், காகித பயன்பாடு, ஊழியர்களின் பணிச்சுமையும் குறையும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தில்லுமுல்லு நடக்காது!

காகித கடிதம் வழியாக கோப்புகள் ஒப்புதல் பெற அனுப்பும் போது, உயரதிகாரிகள் சிலர், அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து கையெழுத்து போடுவதில்லை. கீழ்நிலை அதிகாரிகள் மீதுள்ள நம்பிக்கையில் ஒப்புதல் வழங்குவர். அதிக கோப்புகள் தேக்கம் இருக்கும் போது, இது சர்வ சாதாரணமாக நடைபெறும். இதனால், சில ஆவணங்களை வைக்காமல் ஒப்புதல் பெறுவதும், ஆவணங்களை தவற விடுவதுடன், காலதாமதமாக வைக்கவும் வாய்ப்புள்ளது.இ - ஆபீஸ் வழியாக அனுப்பும் போது, அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். குறிப்பிட்ட ஆவணத்தை ஆன்லைனில் திறக்கும் போது, பதிவு செய்துள்ள அனைத்து ஆவணங்களும் தெரிந்துவிடும். இதனால், முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை என, நம்பப்படுகிறது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை