உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இ.சி.ஆரில் மரங்கள் வேரோடு வெட்டி சாய்ப்பு காற்றில் பறக்கிறது பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

இ.சி.ஆரில் மரங்கள் வேரோடு வெட்டி சாய்ப்பு காற்றில் பறக்கிறது பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: சென்னையின் முக்கிய சாலையாக, இ.சி.ஆர்., எனும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. நான்கு வழியான இந்த சாலை, திருவான்மியூர் முதல் அக்கரை வரை, 10.5 கி.மீ., துாரம், ஆறு வழிச் சாலையாக மாற்றப்பட்டு வருகிறது.மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி, அக்கரை பகுதியில், சாலை விரிவாக்க பணி நடக்கிறது.இதில், நில ஆர்ஜிதம் முடிந்து, வடிகால் பணிகள் முடிந்த பகுதிகளில், சாலை விரிவாக்கம் நடக்கிறது. விரிவாக்கத்திற்கு இடையூறாக இருந்த உயரழுத்த மின்கம்பங்களை, சாலையோரம் மாற்றி நடும் பணி, கடந்த ஆண்டு துவங்கியது.மேலும், நீலாங்கரை முதல் அக்கரை வரை, 5 முதல் 15 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் உள்ளன. சாலை விரிவாக்கத்திற்காக, இந்த மரங்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.அப்போது, மரங்களை வெட்டி அகற்றாமல், மாற்று இடத்தில் நட வேண்டும் என, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.இதையடுத்து முதற்கட்டமாக வாகை, அசோகா, பாதாம், உதயம் உள்ளிட்ட 97 மரங்களின் கிளைகளை வெட்டி, வேருடன் எடுத்து சோழிங்கநல்லுார், ராமன்தாங்கல் ஏரிக்கரையில் நட முடிவு செய்யப்பட்டது.இதற்காக, ஏரிக்கரையில் பள்ளம் எடுத்து தயாராக வைத்த பின், ஒவ்வொரு மரமாக கிளைகளை வெட்டி, மரங்கள் அங்கு நடப்பட்டன.இந்நிலையில் கடந்த சில நாட்களாக, ஈஞ்சம்பாக்கம் பகுதியிலுள்ள, 10க்கும் மேற்பட்ட மரங்களை வேருடன் வெட்டி சாய்த்து, வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர்.இதனால், பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவும், வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் நட வேண்டிய திட்டமும் காற்றில் பறக்க விடப்பட்டு உள்ளது.இது குறித்து, சமூக ஆர்வலர்கள கூறியதாவது:சென்னையில் புயல், கனமழை போன்ற காரணங்களால் இயற்கையாக மரங்கள் சாய்கின்றன. இதுபோக, சாலை விரிவாக்கம், வடிகால் பணி மற்றும் வானுயர்ந்த கட்டடங்கள் கட்ட, மரங்கள் வெட்டப்படுகின்றன. வளர்ச்சி தேவை தான். அதை விட, இயற்கையை பாதுகாப்பது முக்கியம். இதற்காக, எத்தனை மரங்கள் வெட்டப்படுகிறதோ, அதற்கு ஈடாக மரக்கன்றுகள் நடுவது, வேருடன் பிடுங்கி நடுவது போன்ற திட்டங்கள் உள்ளன. நீதிமன்றம் உத்தரவிட்டும், மரங்களை வேருடன் வெட்டி சாய்ப்பது இயற்கைக்கு எதிரானது. தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது,'பசுமை தீர்ப்பாயம் உத்தரவுப்படி செயல்பட்டு வருகிறோம். மரங்களை வேருடன் வெட்டியது தொடர்பாக, விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ