திருமழிசையில் திறப்பு விழா காணாத விபத்து, அவசர சிகிச்சை மருத்துவமனை..
திருவள்ளூர்: சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது திருமழிசை பேரூராட்சி.தற்போது சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது.இந்தச் சாலையில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்களால் விபத்தில் சிக்குபவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் பலர் உயிரிழந்து வருகின்றனர்.இதையடுத்து திருமழிசையில் 2022ம் ஆண்டு துவக்கப்பட்ட 'நம்மை காப்போம் 48' என்ற திட்டத்தின் கீழ் 4 கோடி ரூபாய் மதிப்பில் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை மருத்துவமனை புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கியது. பணிகள் முடிந்து ஓராண்டாகியும் மருத்துவமனை பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது. மேலும் மருத்துவமனைக்கு முறையான சாலை வசதி இல்லை. இரவு நேரங்களில் 'குடி' மகன்களின் கூடாரமாக மாறி வருவதோடு புதருக்குள் மாயமாகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு திருமழிசையில் முதன் முதலாக அமைக்கப்பட்டுள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை மருத்துவமனையில் திறப்பு விழா நடத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.