மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த சீமாவரம் பகுதியில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள வல்லுார் அணைக்கட்டு, 152 ஆண்டுகள் பழமையானது.இந்த அணைக்கட்டு பகுதியில், மழைக்காலங்களில் தேக்கி வைக்கப்படும் மழைநீரால், சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுகிறது.ஆற்றின் கரையோர பகுதிகளில், ஆழ்துளை கிணறுகள் அமைத்து, 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.கடந்தாண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழை மற்றும் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரால், கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.இதனால், வல்லுார் அணைக்கட்டு நிரம்பி வழிந்தது. அதிகபட்சமாக, 72,000 கனஅடி நீர் வெளியேறியது. மழை பொழிவும், ஆற்றில் நீர்வரத்தும் குறைந்ததால், படிப்படியாக அணைக்கட்டில் உபரிநீர் வெளியேறுவதும் குறைந்தது.கடந்த ஜனவரி மாதம் அணைக்கட்டு பகுதியில், 0.3 டி.எம்.சி., தண்ணீர் தேங்கி இருந்தது. தற்போது, கோடை வெயிலின் தாக்கம் மற்றும் அணைக்கட்டில் இருந்த சிறு சிறு ஓட்டைகள் வழியாக வெளியேறியது ஆகியவற்றால், தண்ணீர் படிப்படியாக குறைந்து வருகிறது. அடுத்த சில நாட்களில் அணைக்கட்டு பகுதி வறண்டு விடும் நிலை உள்ளது.அணைக்கட்டு சரிவர பராமரிக்கப்படாமல் இருப்பதாலேயே நீர் இருப்பு குறைந்து உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் அணைக்கட்டில் தண்ணீர் இல்லாமல் வறண்டுவிடும். தற்போது, அணைக்கட்டில் இருந்த ஓட்டைகள் வழியாக தண்ணீர் வெளியேறியதால், முன்கூட்டியே வறண்டுவிடும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, அணைக்கட்டு பகுதியை உரிய முறையில் பராமரிக்கவும், தேங்கும் தண்ணீரை வீணாகாமல் சேமித்து வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.