தாட்கோ திட்டத்தில் இடைத்தரகர்கள் அணுகினால் சட்ட பூர்வ நடவடிக்கை
திருவள்ளூர்:தாட்கோ திட்டத்தில் விண்ணப்பித்தோரிடம் இடைத்தரகர்கள் அணுகினால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, தாட்கோ வாயிலாக பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டு வருகிறது.இத்திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகளுக்கு, விதிமுறைகளின் படி நேர்காணல் நடத்தப்பட்டு, விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்க்கபட்டு தகுதி அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தாட்கோ திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தோரிடம், சில இடைத்தரகர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக நேர்காணலின் போது விண்ணப்பதாரர்கள் தெரிவித்து வருகின்றனர்.எனவே, தாட்கோ திட்ட விண்ணப்பதாரர்கள், தங்களை யாரேனும் இடைத்தரகர்கள் அணுகினால், அவர்களை தவிர்ப்பதுடன், அவர்கள் கேட்கும் பணத்தை வழங்க வேண்டாம். அவ்வாறு அணுகும் இடைத்தரகர்கள் மீது உரிய சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.