| ADDED : ஜூன் 24, 2024 04:56 AM
ஆர்.கே.பேட்டை: திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டையை ஒட்டி, ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்ட எல்லை அமைந்துள்ளது. ஆர்.கே.பேட்டை ஒன்றியம், காட்டூர் மற்றும் தேவலாம்பாபுரம் கிராமங்களை ஒட்டி, ஆந்திர மாநிலம், அய்யன் கண்டிகை கிராம மலைப்பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருந்து தமிழகத்திற்கு சாராயம் கடத்தப்படுவது உண்டு. திருவள்ளூர் மற்றும் சித்துார் மாவட்ட போலீசார் இணைந்து, இந்த பகுதியில் சாராய வேட்டை நடத்தியது உண்டு. இந்த பகுதியில் இருந்து சாராயம் கடத்தப்படுவதை தடுக்க, காட்டூர் மற்றும் தேவலாம்பாபுரம் கிராமங்களில், தமிழக மதுவிலக்கு அமலாக்கத் துறை சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனை சாவடிகள் பெரும்பாலும் பூட்டியே கிடக்கின்றன. ஆனாலும், சோதனை சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. கேமரா வாயிலாக கண்காணிக்கப்படுவதுடன் போலீசாரும் வாகன சோதனையில் ஈடுபட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாராயம் கடத்தும் நபர்கள், மூட்டைகளாக கொண்டு செல்வதால், கேமரா பார்வையில், சாராயம் தான் கடத்தப்படுகிறதா என்பதை கண்டறிவது கடினம் என தெரிவிக்கின்றனர். மேலும், நரசிம்மபேட்டை, மட்டவலம், கொடிவலசா வழியாகவும் ஆந்திர மாநிலம், சித்துாருக்கு சாலை வசதி உள்ளது. இந்த மார்க்கங்களில் சோதனை சாவடிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.