உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அதிகாரி வீடுகளில் கொசு ஒழிப்பு ஊழியர்கள் கமிஷன் தராவிட்டால் பணி நீக்கம் என மிரட்டல்

அதிகாரி வீடுகளில் கொசு ஒழிப்பு ஊழியர்கள் கமிஷன் தராவிட்டால் பணி நீக்கம் என மிரட்டல்

சென்னை மாநகராட்சியில், சில ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் வீடுகளில் உள்ள, முதியோர், நோயாளிகளை கவனிப்பதற்காக, மாநகராட்சி செவிலியர்களை பயன்படுத்துவதாக, கடந்தாண்டு குற்றச்சாட்டு எழுந்தது.இதற்கு மாநகராட்சி தரப்பில் எவ்வித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை.

முன்கள பணியாளர்கள்

இந்நிலையில், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களும், 'ஆர்டலி'களாக பணியாற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையில், டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியில், 3,000 பேர் உட்பட, உள்ளாட்சிகளில், 38,000 பேர் முன்கள பணியாளர்கள் உள்ளனர்.கடந்த எட்டு ஆண்டுகளாக மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் உள்ளாட்சி ஒன்றியங்களில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்களுக்கு தினம், 300 முதல் 350 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.இப்பணியாளர்கள் கொசுக்களால் பரவும் டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல், யானைக்கால் போன்ற நோய்களை தடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.அனைத்து வித வைரஸ் காய்ச்சல் தடுப்பு, டைபாய்டு, காலரா, வாந்தி, பேதி போன்ற நீரினால் பரவும் நோய்கள் தடுப்பு, அம்மை நோய்கள் தடுப்பு, புயல் வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களிலும் தொற்று நோய் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், கொசு ஒழிப்பு பணியை செய்தப்பின், கவுன்சிலர்கள், அதிகாரிகள், உள்ளூர் பிரமுகர்களின் வீட்டு வேலையும் செய்ய நிர்பந்தம் செய்யப்படுவதாக, கொசு ஒழிப்பு பணியாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.தமிழ்நாடு டெங்கு கொசு புழு ஒழிப்பு முன்கள பணியாளர்கள் நல சங்க செயலர் சாந்தி கூறியதாவது:மிகக் குறைந்த ஊதியத்தில் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். எனவே, குறைந்தப்பட்ச அகவிலைப்படி, கொசுப்புழு பணியாளர்களுக்கு மாநகராட்சிகளில் மாதம், 21,503; நகராட்சிகளில், 19,503; பேரூராட்சிகளில், 17,503; ஊராட்சிகளில், 15,503 ரூபாய் என்ற அடிப்படையில், ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அத்துடன் ஒதுக்கிய பணியை தவிர, வேறு எந்த பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது. சென்னை, கடலுார் மாநகராட்சி உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில், உள்ளூர் பிரமுகர்கள், கவுன்சிலர்கள், உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள், சமையல் வேலைகள் போன்றவற்றில் கட்டாயப்படுத்தி பணியாற்ற வலியுறுத்துகின்றனர்.அத்துடன் வீட்டு வரி, தண்ணீர் வரி, தொழில் வரி போன்றவற்றை வசூலிக்கும் வேலைகளிலும் ஈடுபடுத்துகின்றனர். ஊதியமில்லா வேலை செய்ய சொல்வதுடன், ஊதியத்தில் கமிஷன் வழங்க வேண்டும்; மீறினால் பணியை விட்டு நீக்கி விடுவோம் என்று மிரட்டுகின்றனர்.

கொசு ஒழிப்பு

இதனால், செய்ய வேண்டிய கொசுப்புழு ஒழிப்பு பணி பாதிக்கப்படுவதுடன், டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் அதிகரிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றன. எனவே, பணியாளர்களை கொசு ஒழிப்பு பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவ்விவகாரத்தில் அரசு தலையீட்டு உரிய தீர்வை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.காவல்துறையில் புதிதாக பணிக்கு வரும் காவலர்களை, ஆடர்லி முறையில், உயர் அதிகாரிகளின் வீடுகளில் பணியமர்த்தும் முறை இருந்தது. தற்போதும் பல இடங்களில் தொடர்கிறது.அதேபோல், 'கொசுப்புழு ஒழிப்பு போன்ற கீழ்நிலை முன்கள பணியாளர்களை, வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்துவதுடன், சம்பளத்தில் கமிஷன் தர வேண்டும்.'இல்லையென்றால் பணி நீக்கம் செய்யப்படுவர்' என, சென்னை, கடலுார் மாநகராட்சிகள் மட்டுமின்றி, மாநிலத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் அதிகாரிகளால் மிரட்டப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உள்ளாட்சி துறையில் நடக்கும் இந்த ஆர்டலி முறையை கட்டுப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி