நல்லூர் கால்வாய் பாலம் படுமோசம் 2 ஆண்டாக அதிகாரிகள் பாராமுகம்
சோழவரம்:சென்னையின் குடிநீர் ஆதாராங்களில் ஒன்றான சோழவரம் ஏரி, 1.08 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. இங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீர், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, பேபி கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு கொண்டு செல்லப்படுகிறது.இந்த கால்வாயின் குறுக்கே, நல்லுார் பகுதியில் வாகன போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டு உள்ள சிறுபாலம் பராமரிப்பு இன்றி உள்ளது.பாலத்தின் துாண்களில் செடிகள், மரங்கள் வளர்ந்து புதர் மண்டியுள்ளன. ஆங்காங்கே விரிசல்களும் ஏற்பட்டு உள்ளன. இரண்டு ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருப்பதால், பாலம் பலவீனம் அடைந்து, அதன் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.தண்ணீர் கொண்டு லாரிகள், குடியிருப்புகளுக்கு செல்லும் வாகனங்கள் என, தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், மழைக்காலங்களில் சோழவரம் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றும்போது, பராமரிப்பு இன்றி கிடக்கும் பாலம் மேலும் பலவீனமாகி உடையும் அபாயமும் உள்ளது.எனவே, பராமரிப்பு இன்றி உள்ள கால்வாய் பாலத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.