| ADDED : மார் 28, 2024 10:24 PM
பொன்னேரி:பொன்னேரி அடுத்த புதுவாயல் கிராமத்தில் இருந்து, சின்னகாவணம் கிராமம் வரை உள்ள மாநில நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது.இது சென்னை கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பொன்னேரி - பழவேற்காடு மாநில நெடுஞ்சாலையுடன் இணையும் வகையில், 4.2கி.மீ., தொலைவிற்கு, 45 கோடி ரூபாயில் திட்டப்பணிகள் நடைபெறுகின்றன.பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் மற்றும் பெரியகாவனம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை ஒட்டி இந்த சாலை விரிவாக்கம் நடைபெற உள்ளது. இதற்காக வீடு, கோவில், கடைகள் என, 100க்கும் அதிகமான கட்டடங்கள் இடிக்க வேண்டிய நிலை உள்ளது. வீடு, கடைகளை காலி செய்யும்படி நெடுஞ்சாலை துறையினர் அங்கு வசிப்பவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.இதற்கு குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து 'பூர்வீகமாக வாழ்ந்து வரும் தங்களை வெளியேறும்படி கூறுவதை ஏற்கமுடியாது, மாற்று வழித்தடத்தில் சாலை அமைக்க வேணடும்' என வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் தற்போது குடியிருப்புவாசிகளுக்கு மீண்டும் நெடுஞ்சாலைத்துறையினர் வீடுகளை காலி செய்யும்படி 'நோட்டீஸ்' வழங்கி உள்ளனர்.மீண்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் நேற்று தங்களது வீடு, கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் செய்தனர்.வீடுகளை இடித்து விட்டு அரசு கொடுக்கும் பணத்தில் மீண்டும் வீடு கட்ட முடியாது எனவும், பல முறை கோரிக்கை வைத்தும் திட்டத்தை மாற்றுப் பாதையில் கொண்டு செல்லாமல் குடியிருப்புகளை இடிக்க முனைப்பு காட்டுவதை கண்டித்தும் போராட்டம் நடத்துவதாக பகுதியினர் தெரிவித்துள்ளனர்.