இடம் மாற்றிய மதுக்கடைக்கு எதிர்ப்பு
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் பஜார் பகுதியில், கோவில், பள்ளி, அரசு மருத்துவமனை அருகே அரசு மதுக்கடை இயங்கி வந்தது. ஈகுவார்பாளையம் கிராம மக்களுக்கு பல வகையில் இடையூறாக இயங்கி வந்த மதுக் கடையை அகற்ற வேண்டும் என, பல ஆண்டு காலமாக கிராமவாசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன்பேரில், கடந்த வாரம், ஈகுவார்பாளையம் கிராம எல்லையில் உள்ள வாடகை கட்டடத்தில், அந்த கடை இடம் மாற்றப்பட்டது. இடம் மாற்றிய கடைக்கு, சூரப்பூண்டி, பனத்தமேடுகண்டிகை, சாணாபுதுார் மற்றும் ராமசந்திரபுரம் கிராமமக்கள், எதிர்ப்புதெரிவித்து வருகின்றனர்.ஒதுக்குப்புறமாக உள்ள அந்த மதுக்கடை வழியாக மேற்கண்ட நான்கு கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவியர், தினசரி கடந்து செல்கின்றனர். மாலை நேரத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் பள்ளி மாணவியர் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், உடனடியாக அந்த கடையை அகற்ற வேண்டும் என நான்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.