| ADDED : ஏப் 22, 2024 06:35 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில், கூரை இன்றி, பயணியர் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் இருந்த கூரையை தாங்கி நின்ற இரும்பு துாண்களின் ஒன்று, 2016 வர்தா புயலின் போது சாய்ந்தது. அதனை நேராக நிறுத்தி சீர் செய்ய வேண்டும் என கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகத்திற்கு பல முறை மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.கடந்த 2021ம் ஆண்டு, புதிய கூரை அமைப்பது என முடிவு செய்தனர். இதையடுத்து, புதிய கூரை நிறுவ திட்ட அனுமதி பெறாமல், அந்த ஆண்டு இறுதியில் ஏற்கனவே இருந்த மேற்கூரையை அகற்றினர்.அதன்பின் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கூரை அமைக்க, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் திட்ட வரைவு அனுப்பப்பட்டது. பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடம், தானாகுளம் என்ற நீர் நிலை சார்ந்த பகுதி என்பதால், அந்த இடத்தில் கட்டுமானம் மேற்கொள்ள அனுமதி மறுத்து, திட்டம் நிராகரிக்கப்பட்டது.இதையடுத்து, பிரமாண்டமாக இருந்த கூரைக்கு பதிலாக இரு சிறிய சாமியானா பந்தல் அமைக்கப்பட்டது. உள்ளதும் போச்சு என்ற நிலையில், கடந்த இரண்டரை ஆண்டு காலமாக வெயிலிலும் மழையிலும் பயணியர் தவித்து வருகின்றனர்.முறையாக திட்டமிடாமல் அலட்சியமாக செயல்பட்ட பேரூராட்சி நிர்வாகத்தின் மீது கும்மிடிப்பூண்டி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மேலும் தாமதிக்காமல் பேருந்து நிலைய கூரை அமைக்க பேரூராட்சி நிர்வாகம் புதிய முயற்சி எடுத்து செயல்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.