உயர்கோபுர மின்விளக்குகள் பழுது இரவு நேரங்களில் மக்கள் தவிப்பு
பொன்னேரி, பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 2014 - 2024 காலகட்டத்தில், திருவள்ளூர் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில், 50க்கும் மேற்பட்ட உயர்கோபுர மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.மக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய சாலை சந்திப்புகள், பிரபலமான கோவில்களின் முகப்புகள் உள்ளிட்ட இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.இவை ஒவ்வொன்றும், 5.60 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட நிலையில், தொடர் பராமரிப்பு இல்லாமல் செயலிழந்து கிடக்கின்றன. இதனால், இரவு நேரங்களில் பகுதிவாசிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.பொன்னேரி - திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள வேண்பாக்கம், திருவேங்கிடபுரம், இலவம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் உயர்கோபுர மின்விளக்குகள் பழுதால்,அப்பகுதிகள் இருண்டு கிடக்கின்றன.மாநில நெடுஞ்சாலையில் இருப்பதால், இவற்றை யார் பராமரிப்பது என்ற பிரச்னையில் கவனிப்பாரின்றி கிடக்கின்றன. இதே நிலை தான் ஏராளமான கிராமங்களிலும் உள்ளது. செயலிழந்து கிடக்கும் உயர்கோபுர மின்விளக்குகளை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.