பெரியபாளையம் சாலை பராமரிப்பு மோசம் தினமும் நெரிசலில் சிக்கும் வாகனங்கள்
ஊத்துக்கோட்டை: சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலை - ஊத்துக்கோட்டை இடையே, மஞ்சங்காரணை, கன்னிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், தாராட்சி, ஊத்துக்கோட்டை என, 30க்கும் மேற்பட்ட பகுதிகள் உள்ளன. இதில் இணைப்பு சாலை வழியே, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம், நாகலாபுரம், பிச்சாட்டூர், நகரி, புத்துார், ரேணிகுண்டா, திருப்பதி, கடப்பா, கர்நுால், நந்தியால் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் மேற்கண்ட சாலை வழியே பயணிக்கின்றன.தினமும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இச்சாலை வழியே செல்கின்றன. அதிகளவு போக்குவரத்து நிறைந்த இந்த சாலை பராமரிப்பு மிக மோசமான நிலையில் உள்ளது. சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள், சாலை வளைவுகள், மீடியன் மற்றும் சாலையோரம் வளர்ந்துள்ள செடிகள், பெரியபாளையத்தில் சேறும், சகதியுமான சாலை என இச்சாலை பராமரிப்பு மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் விபத்து அபாயம் உள்ளது.நேற்று பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். வழக்கம் போல், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றாததால், பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், வயதானவர்கள் கடும் அவதிப்பட்டனர். மேலும், அங்குள்ள அரசு மேனிலைப் பள்ளி அருகே சாலையோரம் சேறும், சகதியுமாக காணப்பட்டது. போக்குவரத்து அதிகமுள்ள சாலையில் தினமும் ஏற்படும் நெரிசல் மற்றும் சாலை பராமரிப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.