உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மழைநீர் கால்வாய் படுமோசம்: அதிகாரிகள் மவுனம்

மழைநீர் கால்வாய் படுமோசம்: அதிகாரிகள் மவுனம்

மீஞ்சூர்: மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு, அவை சரிவர பராமரிக்கப்படாமல் உள்ளன. பெரும்பாலான மழைநீர் கால்வாய்களில், குடியிருப்புகளின் கழிவுநீரே செல்கிறது.மழைநீர் கால்வாய்களில் குப்பை குவிந்தும், திறந்த நிலையிலும் இருக்கிறது. இதனால், சுகாதார பாதிப்புகள் உருவாகும் நிலை உள்ளது. மழைக்காலங்களில் கழிவுநீர் கலந்து, வெளியேற வழியின்றி குடியிருப்புகளையும் சூழ்ந்து விடுகிறது.வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், கால்வாய் துார்ந்து கிடப்பதால், மழைநீர் செல்வதிலும் சிக்கல் ஏற்படும். மழைநீர் கால்வாய்களை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:மீஞ்சூர் பகுதியில் கழிவுநீர் வெளியேற்றுவதற்கு வசதியில்லை. அதனால் மழைநீர் கால்வாய்களில் அவை விடப்படுகிறது. கழிவுநீர் வெளியேறுவதற்கு கால்வாய் அமைத்து, அவற்றை சுத்திகரித்து நீர்நிலைகளில் விடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளன.சென்னை புறநகர் பகுதிகளில் ஒன்றாக உள்ள மீஞ்சூர் பேரூராட்சியில், நாளுக்கு நாள் குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. தற்போதைய நிலைக்கு ஏற்ப கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது, மழைநீர் கால்வாய்களை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மேலும், பொன்னேரி - ஆலாடு சாலையில் இருந்து, ரயில் நிலையம் வரை மழைநீர் செல்வதற்காக, கடந்தாண்டு கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய், நீர்நிலைகளுக்கு சென்று சேரும் வகையில் அமையாமல், ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.தற்போது, மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து, அப்பகுதியில் குளம்போல் தேங்கியுள்ளது. அதிக மழைப்பொழிவு ஏற்பட்டால், தண்ணீர் செல்ல வழியில்லாமல், குடியிருப்புகளை சூழும் அபாய நிலை உள்ளது. தற்போது, கால்வாய் பணிகள் முடிவுற்ற இடத்தில் இருந்து, 100 மீ., தொலைவில் வேண்பாக்கம் ஏரி அமைந்துள்ளது. அதில், மழைநீர் சென்று சேரும் வகையில், கால்வாய் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:கால்வாய் நீர்நிலைகளில் சென்று சேரும் வகையில் அமைக்காமல், அரைகுறை பணிகளுடன் நிற்கிறது. தற்போது, அமைக்கப்பட்டுள்ள கால்வாயால் எந்த பயனும் இல்லை.மழைக்காலம் துவங்க உள்ள நிலையில், பொன்னேரி நகராட்சி நிர்வாகம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை