பொன்னேரியில் நகராட்சி குப்பை எரிப்பதால் சுகாதாரம் பாதித்து குடியிருப்புவாசிகள் தவிப்பு
பொன்னேரி:பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இருந்து, தினமும் 10,000 --- 11,000 கிலோ குப்பை கழிவு வெளியேற்றப்படுகிறது.நகராட்சி துாய்மை பணியாளர்களால் சேகரிக்கப்படும் குப்பை கழிவு, பொன்னேரி திருவாயற்பாடியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்கிற்கு கொண்டு சென்று தரம் பிரித்து கையாளப்படுகிறது.இங்கு, 4.000 - 6,000 கிலோ வரை மட்டுமே தரம் பிரித்து கையாளப்படும் நிலையில், மற்றவை பொன்னேரி ஆரணி ஆற்றின் பல்வேறு பகுதிகளில் கொட்டி குவிக்கப்பட்டு வருகிறது.அவை அவ்வப்போது, நகராட்சியினரால் எரிக்கபட்டும் விடுகிறது. எரிக்கப்படும் குப்பையில் பிளாஸ்டிக் கவர்கள், டயர்கள், ரப்பர் பொருட்கள், நைலான்கள் என, பல்வேறு மட்காத கழிவும் இருக்கின்றன.குப்பையுடன் சேர்ந்து இவை எரியும்போது கடும் துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதியே புகை மண்டலமாாக மாறி, அருகில் உள்ள குடியிருப்புகள் வரை பரவுகிறது.இதனால் குடியிருப்புவாசிகள் சுகாதாரம் பாதித்து, அவர்கள் தவிப்பிற்கு ஆளாகின்றனர். குப்பை கழிவு எரிக்கப்படுவதை தடுக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவை முழுமையாக தரம் பிரித்து கையாள தேவையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.