மேலும் செய்திகள்
ரூ.1 கோடி நிலமோசடி: முதியவருக்கு ' காப்பு '
03-Sep-2024
ஆவடி:அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், 33. இவர், கடந்த 28ம் தேதி ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில் குறிப்பிடப்பட்டு இருந்ததாவது:நிலம் வாங்குவது தொடர்பாக எனக்கு, சுரேந்தர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. திருமுல்லைவாயல், பாலாஜி நகரில் உள்ள 7,200 சதுர அடி நிலத்தின் பொது அதிகாரம், சுரேந்தரிடம் இருந்தது தெரிந்தது.கடந்த நவ., 23ம் அந்த நிலத்தை, 3.66 கோடி ரூபாய்க்கு விலை பேசி, அம்பத்துார் சார் - பதிவாளர் அலுவலகத்தில் என் தந்தை அருணாச்சலம் பெயரில் பத்திரப்பதிவு செய்தேன். அதில், சுரேந்தரின் நண்பர்களான பாபு மற்றும் பராக்சூடா ஆகியோர் சாட்சி கையெழுத்து போட்டனர்.மேற்படி இடத்தில், நான் சுற்றுச்சுவர் கட்ட சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அந்த இடம் நாராயணன் என்பவரின் குடும்பத்திற்கு சொந்தமானது என்றும், அதை தரை வாடகைக்கு வாங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.கடந்த 2016ல், மேற்கூறிய நிலம் தொடர்பான வழக்கில் சுரேந்தர் மற்றும் அவரது நண்பர் பாபு ஆகியோர் சிறை தண்டனை பெற்றுள்ளனர்.அவர்கள் வெளியே வந்ததும், அதே நிலத்தை போலி ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் செய்து என்னிடம் விற்று ஏமாற்றியுள்ளனர்.எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து விசாரித்த போலீசார், தலைமறைவாக இருந்த பாடியைச் சேர்ந்த சுரேந்தர், 53, பாபு, 58, அயப்பாக்கத்தைச் சேர்ந்த கமல், 46, கெல்லீஸ் பகுதியைச் சேர்ந்த பராக்சூடா, 46, சூளையைச் சேர்ந்த ஹரிகுமார், 50, மற்றும் அமைந்தகரையைச் சேர்ந்த சையது முகமது பரூக், 50, ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
03-Sep-2024