குழந்தைகளை நாய்கள் விரட்டியதால் பரபரப்பு
பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியம், தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னியம்மன் நகர் பகுதியில் தனிநபர் ஒருவர், 10 -15 நாய்களை வளர்த்து வருகிறார். நாள்முழுதும் வீட்டின் உள்ளே அடைத்து வைக்கப்படும் நாய்களை உடல் உபாதைகளை கழிக்க வீட்டின் வெளியே தெருக்களில் விடும்போது, அவை ஆக்ரோஷமாக சுற்றித்திரிகின்றன.தெருக்களில் செல்பவர்களை விரட்டுவது, கடிப்பது உள்ளிட்ட செய்கைகளால் அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் அச்சத்திற்கு ஆளாகின்றனர். சிலர் நாய்கடிக்கு ஆளாகி சிகிச்சை பெற்று உள்ளனர்.இது குறித்து குடியிருப்புவாசிகள் கடந்த, இரண்டு மாதங்களுக்கு முன் பொன்னேரி காவல் நிலையத்திலும் புகார் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில், நேற்று மதியம், மேற்கண்ட பகுதியில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் தெருவில் விளையாடுவதற்கு வந்தனர். அப்போது தெருவில் கூட்டமாக சுற்றித்திரிந்த நாய்கள் அவர்களை விரட்டின. குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி தடுமாற்றம் அடைந்தனர்.குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டில் இருந்த பெரியவர்கள் ஓடிவந்து நாய்களை விரட்டி அடித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.இதுபோன்ற சம்பவம் இப்பகுதியில் தொடர்ந்து நடைபெறும் நிலையில் தடப்பெரும்பாக்கம் ஊராட்சி, மீஞ்சூர் ஒன்றியம் நிர்வாகம் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. திருமழிசையிலும் தொல்லை
திருமழிசை பேரூராட்சியில் தெருநாய்கள் பெருக்கம் அதிகரித்து விட்டது. இவற்றை கட்டுப்படுத்த பேரூராட்சி முறையான நடவடிக்கை எடுக்கவில்லை.இந்த நாய்கள் கூட்டம் கூட்டமாக நெடுஞ்சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் நடுவில் படுத்து ஓய்வு எடுப்பதால், டூ- வீலரில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். சாலையில் நடந்து செல்வோரை கடிப்பது. குழந்தைகளை துரத்துவது, இறைச்சிக்கடை உள்ள பகுதியில் உணவை தேடி அங்கும் இங்கும் ஓடுவது என தொடர்ந்து நாய்கள், குடியிருப்புவாசிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டுமென திருமழிசை பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.