திருத்தணி காய்கறி சந்தைக்கு காமராஜர் பெயரே நீடிக்கும்
சென்னை, 'திருத்தணி நகராட்சி காய்கறி சந்தைக்கு, காமராஜர் பெயரே நீடிக்கும்' என, தமிழக நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராஜு அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை:திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சி, ம.பொ.சி., சாலையில் அமைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான காய்கறி காமராஜர் சந்தை, 81 கடைகளுடன், 35 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. சிதிலமடைந்து மோசமான நிலையில் இருந்த பழைய கட்டடத்தை இடித்து, கருணாநிதி நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், 3.02 கோடி ரூபாய் மதிப்பில், 97 கடைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. புதிய சந்தையின் அனைத்து பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன. புதிதாக கட்டப்பட்டுள்ள காய்கறி சந்தைக்கு, 'பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி' என பெயரிட, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அன்புமணி எதிர்ப்புபுதுப்பிக்கப்பட்ட காமராஜர் காய்கறி சந்தைக்கு, கருணாநிதி நுாற்றாண்டு காய்கறி அங்காடி என பெயர் மாற்றப்பட இருப்பதாக செய்திகள் வெளியாயின. இதற்கு பா.ம.க., தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.சந்தைக்கு மீண்டும் காமராஜர் பெயரையே வைக்க வேண்டும் என, சட்டசபை காங்., கட்சித் தலைவர் ராஜேஷ்குமார், முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருந்தார்.கடும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, திருத்தணி காய்கறி சந்தைக்கு, 'காமராஜர் பெயரே நீடிக்கும்' என, அரசு அறிவித்துள்ளது.