ஊராட்சிகளில் அதிகாரிகளின் செயல்பாடு சுணக்கம்: அடிப்படை வசதிகள் கிடைக்காமல் மக்கள் தவிப்பு
மீஞ்சூர்:உள்ளாட்சி பிரநிதிகளின் பதிவிக்காலம் முடிந்த நிலையில், அதிகாரிகளின் கண்காணிப்பில் உள்ள கிராம ஊராட்சிகளில் அவர்களின் செயல்பாடுகள் சுணக்கமாக இருப்பதால், அடிப்படை வசதிகளுக்கு மக்கள் காத்திருந்து தவிக்கின்றனர்.மீஞ்சூர் ஒன்றியத்தில், 55 ஊராட்சிகள் உள்ளன. இதில், 55 தலைவரகள், 420 வார்டு உறுப்பினர்கள், 26 ஒன்றிய கவுன்சிலர்கள், மூன்று மாவட்ட கவுன்சிலர்கள் என, 504 பேரின் பதவிக்காலம், கடந்த ஜனவரி மாதம், 5ம் தேதியுடன் முடிந்தது.வார்டு மறு சீரமைப்பு, நகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்பு, ஊராட்சிகள் பேரூராட்சியாக தரம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் உடனடியாக நடைபெறவில்லை.அதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில், ஐந்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்காணிப்பில் ஊராட்சி நிர்வாகங்கள் கண்காணிக்கப்படுகின்றன.ஒவ்வொரு துணை வட்டார வளர்ச்சி அலுவலரும், 10 -12 ஊராட்சிகளை கவனித்து வருகின்றனர்.ஒவ்வொரு ஊராட்சியிலும், தலைவர், வார்டு உறுப்பினர்கள் தத்தம் பகுதியில் குடிநீர், மின்விளக்கு, சாலை பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து ஒன்றிய நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு தீர்வு ஏற்படுத்தி வந்தனர்.தற்போது, உள்ளாட்சி பிரநிதிகள் இல்லாமல் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் ஊராட்சி நிர்வாகங்கள் மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தருவதில் சுணக்கம் காட்டுகின்றன.கிராமங்களில் மின்விளக்குகள் பராமரிக்கப்படுவதில்லை. குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டால் அவை உடனுக்குடன் சரிசெய்து, சீரான குடிநீர் வழங்குவதில்லை. அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியாமல் கிராமவாசிகள் தவிக்கின்றனர்.கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், பம்ப் ஆப்ரேட்டர் உள்ளிட்டோருக்கு குறித்த நேரத்தில் சம்பளம் வழங்கப்படுவதில்லை. சாலை பராமரிப்பு, குப்பை சேகரிப்பு உள்ளிட்ட பணிகளும் கண்காணிக்கப்படாமல் உள்ளன.இது குறித்து கிராமவாசிகள் கூறியதாவது:தலைவர், வார்டு உறுப்பினர்கள் இருக்கும்போது, புகார் தெரிவித்தால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பர். இப்போது யார் அதிகாரி என்பதே தெரிவதில்லை. ஒன்றிய அலுவலகத்திற்கு சென்றாலும், அதிகாரிகளை பார்க்க முடிவதில்லை. ஊராட்சி செயலரிடம் தெரிவித்தால், நிதி குறைவாக வருகிறது என கை விரிக்கின்றனர். இதனால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. மின்விளக்கு பழுதால் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகள் இருண்டு கிடக்கின்றன. ஒரு சிலர் தங்களது சொந்த செலவில் மின்விளக்குகளை வாங்கி தெருவிளக்கு கம்பங்களில் பொருத்தி வருகின்றனர். அதிகாரிகள் மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. குழாய் உடைப்பு, சாலைபராமரிப்பு குறித்து நாளிதழ்களில் செய்தி வந்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதே நிலை தொடர்ந்தால், தமிழக அரசின் மீது பொதுமக்களுக்கு வெறுப்பு ஏற்படும். ஒவ்வொரு ஊராட்சிக்கும் நியமிக்கப்பட்ட அதிகாரியின் மொபைல் எண்ணை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதில் பொதுமக்கள் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். இதில் மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்திட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.