திருவள்ளூர்: திருவள்ளூரில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு நேரடி பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். கடும் சிரமம்
தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் தற்போது, கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.இதுவரை கோயம்பேட்டில் இருந்து தொலைதுார பேருந்துகள் இயக்கப்பட்டதால், திருவள்ளூர், திருத்தணியில் இருந்து கோயம்பேட்டிற்கு மாநகர மற்றும் விழுப்புரம் கோட்ட விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.தற்போது, கிளாம்பாக்கத்திற்கு செல்ல திருவள்ளூரில் இருந்து நேரடி பேருந்து வசதி இல்லை. திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ளோர், பூந்தமல்லிக்கு சென்று பின் தாம்பரம் பேருந்தில் பயணம் செய்து, பின், கிளாம்பாக்கத்திற்கு செல்லும் பேருந்துகளில் பயணிக்க வேண்டி உள்ளது. மூன்று பேருந்துகள் மாறிச் செல்ல வேண்டும் என்பதால், உடைமைகள், குழந்தைகளுடன் பயணம் செய்வோர் கடும் சிரமப்படுகின்றனர். எனவே, திருவள்ளூர் பகுதி மக்கள் வசதிக்காக, திருவள்ளூரில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு நேரடி பேருந்துகள் இயக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நேர அட்டவணை
ஊத்துக்கோட்டை பேருந்து பணிமனையில் இருந்து சென்னை, கோயம்பேடு, செங்குன்றம், காஞ்சிபுரம், பிளேஸ் பாளையம், மாம்பாக்கம், திருச்சி, கள்ளக்குறிச்சி மற்றும் ஆந்திர மாநிலம், திருப்பதி, நெல்லுார், சத்தியவேடு ஆகிய பகுதிகளுக்கு, 35 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் கிராமங்கள் சூழ்ந்த பகுதி.இப்பகுதிகளில் இருந்து மாணவர்கள் உயர்கல்வி கற்க, வெளியூர்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் அதிகளவில் உள்ளனர். இவர்கள் போக்குவரத்திற்கு அரசு பேருந்துகளை மட்டுமே நம்பி உள்ளனர். மன உளச்சல்
குறிப்பாக, திங்கட்கிழமைகளில் விடுமுறை முடிந்து வேலைக்கு செல்பவர்கள், கல்லுாரிகளுக்கு செல்பவர்கள் அதிகளவில் பேருந்து நிலையத்தில் இருப்பர்.இந்த நேரங்களில் எந்த பேருந்து எந்த நேரத்திற்கு வரும், செல்லும் என்பது போன்ற நேர அட்டவணை இங்கு இல்லை. அங்குள்ள நேரக்காப்பாளரை தொடர்பு கொண்டால், பேருந்து வந்து விடும் என கூறுகிறார். இதனால், பயணியர் மன உளச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பேருந்து நிலையத்தில், பேருந்துகள் வந்து செல்லும் நேர அட்டவணை வைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.