| ADDED : ஜூன் 14, 2024 01:18 AM
பொன்னேரி:பொன்னேரி நகரத்தின் வழியாக, பழவேற்காடு மற்றும் மீஞ்சூர் ஆகிய பகுதிகளுக்கு, தினமும், 20,000க்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன.இதனால், பழைய பேருந்து நிலையம், புதிய தேரடி தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டும் பணிகள் ஒருபுறமும், மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் மறுபுறம் என சாலைகள் தோண்டி எடுக்கப்பட்டு உள்ளன.இதனால் மாநில நெடுஞ்சாலைகள் குறுகலாக மாறி கிடக்கிறது. இதனால் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்கின்றன. கனரக வாகனங்கள் எதிர் எதிரே வரும்போது, நீண்டநேரம் நெரிசல் தொடர்கிறது.காலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவர்கள், தனியார் பள்ளி மற்றும் கல்லுாரி வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு செல்லும் அவசர ஊர்திகளும் நெரிசலில் சிக்கி நோயாளிகள் உரிய நேரத்தில் மருத்துவமனை செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்கு உள்ளூர் போலீசார் எந்தவொரு நடவடிக்கை எடுப்பதில்லை. அதே நேரம் காவல் ரோந்து வாகனங்கள் நிழலான பகுதிகளில் ஓய்வெடுத்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலால் தினமும் மக்கள் அவதியுற்றி வருகின்றனர்.