நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற வாகனம் போக்குவரத்து பாதிப்பு
திருத்தணி:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருத்தணி புதிய பைபாஸ் சாலை அருகே, நேற்று மதியம், 2:00 மணிக்கு, 22 சக்கரம் கொண்ட கனரக வாகனம் ஒன்று திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கி வந்த போது திடீரென பழுதாகி நெடுஞ்சாலையில் நின்றது. இதனால் நெடுஞ்சாலையில், ஒன்றரை கிலோ மீட்டர் துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தகவல் அறிந்ததும் திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஜே.சி,பி. இயந்திரம் உதவியுடன் நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற வாகனத்தை, ஒருமணி நேரம் போராட்டி வாகனத்தை சாலையில் அகற்றினர். தொடர்ந்து, மாலை, 3:30 மணிக்கு வாகனங்கள் ஊர்ந்து செல்லத் துவங்கியது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். மாலை 5:00 மணிக்கு மேல், தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் வாகனங்கள் சென்றன.பொன்னேரி - தச்சூர் மாநில நெடுஞ்சாலையில், மாதவரம் பகுதியில் இரண்டு தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளுக்கு வருபவர்கள் கொண்டு இருசக்கர வாகனங்கள் சாலையின் அருகில் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.இவை சாலை வரை நிறுத்தி வைக்கப்படுவதால், அவ்வழியாக செல்லும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாற்றம் அடைகின்றனர். தொழிற்சாலை வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இருக்கும் நிலையில், சாலையில் நிறுத்தப்படுவதால், மற்ற வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்லும் சமயங்களில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.விபத்துக்கள் நேரிடும் முன், போக்குவரத்து போலீசார் இவற்றை முறைப்படுத்தவும், தொழிற்சாலை நிர்வாகங்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.