பார்க்கிங் ஏரியாவான பேருந்து நிலையம் ஊத்துக்கோட்டையில் அவலம்
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் உள்ள பணிமனையில் இருந்து, கோயம்பேடு, செங்குன்றம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர், புத்துார், திருப்பதி, நெல்லுார், சத்தியவேடு, காளஹஸ்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, 35 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இவை அனைத்தும் பஜாரின் மையப் பகுதியில் உள்ள ஊத்துக்கோட்டை பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து இயக்கப்படுகிறது. இது தவிர மாநகர பேருந்து, தனியார் பேருந்து என 20க்கும் மேற்பட்ட பேருந்துகள், பேருந்து நிலையம் உள்ளே சென்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 85 லட்சம் ரூபாயில் பேருந்து நிலையத்தில், கூரை அமைக்கப்பட்டது. மழை, வெயில் காலங்களில் பயணியர் தங்களை காத்துக் கொள்ள உதவுகிறது. மேலும், காத்திருக்கும் பேருந்துகள் வெயில், மழையில் இருந்து காக்கப்படுகிறது.என்ன காரணத்திற்காக கூரை அமைக்கப்பட்டதோ, அதற்கு மாறாக பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்கு பதில் கார், பைக், வேன் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன. இதனால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.