மீஞ்சூரில் போதை பொருள் தயாரித்து விற்ற இருவர் கைது
மீஞ்சூர்: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தடுக்கும் வகையில், நேற்று மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.மீஞ்சூர் அடுத்த நாலுார் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கினர். சோதனை செய்தபோது, போதை பொருட்களில் ஒரு வகையான 'ஜர்த்தா மாவா' கலவை, 200 பாக்கெட்டுகள், 2 கிலோ இருந்தன.விசாரணையில், பொன்னேரி அடுத்த எலவம்பேடு பகுதியை சேர்ந்த கவுதுல் ஆலம், 50, என்பதும் போதை பொருள் விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது.தொடர் விசாரணையில், மீஞ்சூர் அடுத்த நாலுார் பகுதியை சேர்ந்த ராஜேஷ், 42 என்பவரது வீட்டில் இருந்து இவை விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டதும் தெரிந்தது.ஆலம் மற்றும் ராஜேஷ் ஆகியோர் ஆந்திர மாநிலத்தில் இருந்து மாவா, ஜர்த்தா மற்றும் சீவல் பாக்குகள் ஆகியவற்றை வாங்கி வந்து ஒன்றாக அரைத்து போதை பொருட்களை தயாரித்து பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் பதுக்கி வைத்திருந்த, 75 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.