பழவேற்காடு முகத்துவாரத்தில் இறந்து கரை ஒதுங்கிய 10 கடல் ஆமைகள்
பழவேற்காடு,ஆழ்கடல் பகுதியில் உள்ள அரியவகை ஆமைகள், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி - ஏப்ரல் மாதங்களில் கடற்கரை பகுதிகளுக்கு வந்து முட்டையிடுவது வழக்கம்.பழவேற்காடு கடற்கரை பகுதியிலும், கடல் ஆமைகள் இனப்பெருக்க காலங்களில் வந்து செல்வது உண்டு. கடற்கரையில் அவை விட்டுச் செல்லும் முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து, அடைகாத்து குஞ்சு பொரித்தபின், கடலில் விடுகின்றனர்.இந்த ஆண்டும், கடல் ஆமைகளின் முட்டைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சில தினங்களாக முகத்துவாரம் பகுதியில் துவங்கி காட்டுப்பள்ளி வரை உள்ள கடற்கரையோரங்களில் இறந்த நிலையில் கடல் ஆமைகள் கரை ஒதுங்கி வருகின்றன. நேற்று காலை, பழவேற்காடு முகத்துவாரப் பகுதியில், 10க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. இதைக் கண்டு மீனவர்கள் கவலை அடைந்தனர்.இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:தற்போது, ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக கடற்கரை பகுதியை நோக்கி நகரும்போது, அதிக விசைத்திறன் கொண்ட லான்ச்சர் படகுகளில் சிக்கி உயிரிழக்கின்றன. பின், அவை இறந்த நிலையில் கரை ஒதுங்குகின்றன. பெரும்பாலும் இவை ஆழ்கடல் பகுதியில் பல்வேறு காரணங்களால் இறந்து, காற்றின் திசைக்கு ஏற்ப கடற்கரைகளில் கரை ஒதுங்குகின்றன.ஒரு மாதத்தில் 30க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன. வனத்துறையினர் தினமும் அவற்றை ஆய்வு செய்து, அதே பகுதியில் பள்ளம் தோண்டி புதைத்தும் வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.