உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆர்.கே.பேட்டையில் 11.70 செ.மீ., மழை பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதம்

ஆர்.கே.பேட்டையில் 11.70 செ.மீ., மழை பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதம்

ஆர்.கே.பேட்டை:ஒரே நாள் இரவில், ஆர்.கே.பேட்டை பகுதியில், 11.70 செ.மீ., மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இந்த மழைக்கு அரசு பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து சேதமடைந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம், பள்ளிப்பட்டில் 21 மி.மீ., திருவாலங்காட்டில் 22 மி.மீ., மழையும், அதிகபட்சமாக ஆர்.கே.பேட்டையில் 11.70 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது. ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில், நேற்று முன்தினம் இரவு 8:30 மணி முதல் 11:30 மணி வரை கனமழை கொட்டித்தீர்த்தது. இடைவிடாது தொடர்ந்து மூன்று மணி நேரம் சீராக பெய்த கனமழையால், தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்தது. சூறாவளி காற்று வீசாததால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. ஆர்.கே.பேட்டை அடுத்த ராகவநாயுடுகுப்பம் அரசு நடுநிலை பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீர் வெளியேற வழியின்றி, கிழக்கு பக்கம் இருந்த சுற்றுச்சுவரை தரைமட்டமாக சாய்த்து விட்டு வெளியேறியது. இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை அகற்றும் பணியில், தொழிலாளர்கள் நேற்று ஈடுபட்டனர். கதனநகரம் அடுத்த எஸ்.கே.வி.கண்டிகை கிராமம், ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்ட மலைகளை ஒட்டி அமைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தின் முதன்மையான நீர்ப்பிடிப்பு பகுதியான இங்கு, வயல்வெளிகளில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளது. எஸ்.கே.வி.கண்டிகை ஏரி முழுதுமாக நிரம்பி, கலங்கல் வழியாக உபரிநீர் வெளியேறி வருகிறது. நீண்ட காலமாக தண்ணீர் இன்றி வறண்டு கிடந்த ஸ்ரீகாளிகாபுரம் கிராம பொதுகுளத்திற்கும், இந்த கனமழையால் தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது. ஆர்.கே.பேட்டை அடுத்த விளக்கணாம்பூடி, புது காலனியை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரின் வீட்டு சுவர் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, இந்த கனமழையால் எந்தவித உயிர் சேதமும் இல்லை. நெல் வயல்கள், வேர்க்கடலை தோட்டங்களில் தேங்கிய மழைநீரும், நேற்று மாலை முழுதுமாக வெளியேறியதால் பயிர் சேதமும் தவிர்க்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை