சாலையில் குறுக்கே வந்த மாடு வேன் கவிழ்ந்து 12 பேர் படுகாயம்
ஆவடி, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து 25 பேர், ஆவடியில் நடந்த பெயர் சூட்டு விழாவிற்கு வந்து கொண்டிருந்தபோது, சாலையில் மாடு குறுக்கே வந்ததில் வேன் கவிழ்ந்து 12 பேர் படுகாயமடைந்தனர்.ஆவடி, கோவில்பதாகை, மசூதி தெருவைச் சேர்ந்தவர் பிரசாத், 28. இவரது மனைவி பார்கவி, 25. இவர்களது மகளின் பெயர் சூட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, பொன்னேரியில் இருந்து அவரது உறவினர்கள் 25 பேர், 'மஹிந்திரா மாக்ஸி கேப்' வேனில், வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக, நேற்று காலை வந்து கொண்டிருந்தனர்.பொன்னேரி, சின்னகாவனம் பகுதியைச் சேர்ந்த முனிவேல், 45, என்பவர் வேனை ஓட்டினார். ஆவடி, காட்டூர் சிப்காட் அருகே வேன் வேகமாக வந்தபோது, சாலையின் குறுக்கே திடீரென மாடு ஒன்று வந்துள்ளது. மாட்டின் மீது மோதாமல் இருக்க, ஓட்டுநர் வேனை வலதுபுறம் திருப்பியபோது, அருகில் சென்ற லாரியில் உரசி, வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.தகவலறிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், காயமடைந்த 20 பேரையும் மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.விபத்தில் படுகாயமடைந்த வேன் ஓட்டுநர் முனிவேல், வேனில் பயணித்த ஆஷிகா, 45, லதா, 50, சுசிலா, 40, ஜெகநாதன், 35, உள்ளிட்ட 12 பேர், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். சிறுவன், சிறுமி உட்பட எட்டு பேர், லேசான காயங்களுடன் தப்பினர். ஐந்து பேருக்கு, அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் ஏற்படவில்லை.விபத்து குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு விசாரிக்கின்றனர்.