கரும்பு தோட்டத்தில் 13 தொழிலாளர்கள் மீட்பு
பள்ளிப்பட்டு:விழுப்புரம் மாவட்டம், கூனிமேடு இருளர் காலனியை சேர்ந்தவர் காளியப்பன், 25. அவர், கூனிமேடு இருளர் காலனியை சேர்ந்த அவரது உறவினர்கள் 13 பேரை ஒப்பந்த தொழிலாளர்களாக பள்ளிப்பட்டு பகுதிக்கு அழைத்து வந்துள்ளார். அவர்களை கர்லம்பாக்கம் பகுதியில் கரும்பு வெட்டு தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். இவர்களுக்கு குறைவான சம்பளம் மட்டும் கொடுத்து அதிக நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்தி வந்துள்ளார். இது குறித்து கர்லம்பாக்கம் வி.ஏ.ஓ., செந்திலுக்கு தகவல் கிடைத்தது. அவர், விசாரித்ததில் உண்மை என தெரிந்தது. இது குறித்து பள்ளிப்பட்டு போலீசில், செந்தில் புகார் அளித்தார். கொத்தடிமைகளாக இருந்த தொழிலாளர்களை பள்ளிப்பட்டு போலீசார் மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, காளியப்பனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.