உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் 3 மாதத்தில் 15 பேர் தற்கொலை முயற்சி அரசு பள்ளி மாணவியருக்கு கவுன்சிலிங் அவசியம்

திருத்தணியில் 3 மாதத்தில் 15 பேர் தற்கொலை முயற்சி அரசு பள்ளி மாணவியருக்கு கவுன்சிலிங் அவசியம்

திருத்தணி: திருத்தணி அரசு பள்ளியில் படிக்கும் மாணவியர்கள் கடந்த மூன்று மாதங்களில் 15 பேர் வரை தற்கொலை முயற்சி செய்துள்ளனர். மாணவியருக்கு, கல்வி மற்றும் தன்னம்பிக்கை குறித்து விழிப்புணர்வு மற்றும் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 1,420க்கும் மேற்பட்ட மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவியர் பயின்று வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களாக மாணவியர் சிலர், வீடுகளில் இருந்து பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு, தோழியருடன் திருத்தணியில் உள்ள கோவில், பஜார் போன்ற இடங்களில் சுற்றி வருகின்றனர். பள்ளிக்கு வராத மாணவியர் குறித்து, வகுப்பு ஆசிரியர்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காததால், மாணவியர் வகுப்பு களுக்கு செல்வதில்லை. கடந்த சில மாதங்களாக மாணவியர், பூச்சி மருந்து, அதிக மாத்திரைகள், விஷக்காய்கள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். பெரும்பாலான மாணவியர் வகுப்பறையில் மயங்கி விழுந்துள்ளனர். அவர்களை ஆசிரியர்கள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த மூன்று மாதத்தில் மட்டும், 15க்கும் மேற்பட்ட மாணவியர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர். மாணவியர் தற்கொலை முயற்சிக்கு செல்லும் மனநிலையை தடுக்க, மாணவியர் இடையே விழிப்புணர்வு மற்றும் கவுன்சிலிங் அவசியம் தேவைப்படுகிறது. எனவே, கலெக்டர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் உரிய நடவடிக்கை எடுத்து, அரசு பள்ளி மாணவியர் தற்கொலை முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி